தூத்துக்குடியில் பயங்கரம் லாரிஷெட் உரிமையாளர் குண்டு வீசி வெட்டிக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள், வெடிகுண்டுகள் வீசி லாரிஷெட் உரிமையாளரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் சக்திவேல் (52). லாரிஷெட் உரிமையாளர். இவர் மீது கருப்பசாமி என்பரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அவர் சங்கரப்பேரியில் உள்ள லாரி ஷெட்டில் அமர்ந்திருந்தார். அப்போது இரு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர் மீது இரு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசியது. இவை அவரது அருகே விழுந்து வெடித்த நிலையில் 3வதாக ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினர்.

ஆனால், அது கேட்டில் பட்டு வெடிக்காமல் விழுந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் தப்பியோடினார். ஆனால், அவரை விரட்டிச் சென்ற கும்பல் சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டு தப்பியது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் வந்து வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கடந்த 2017ல் சங்கரப்பேரியைச் சேர்ந்த சக்திவேலின் உறவினரான அங்குசாமி 5 பேரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் கருப்பசாமி (எ) கருப்பு 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பெரிய ரவுடியாக உலா வந்துள்ளார். அவர் மீது கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் கடந்த ஜனவரி 28ம் தேதி பழிக்குப்பழியாக கருப்பசாமி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி சிறை சென்ற சக்திவேல், 40வது நாளிலேயே ஜாமீனில் வெளிவந்தார். இதனால் தீராத ஆத்திரத்திற்கு ஆளான கருப்பசாமியின் நண்பர்களும், உறவினர்களும் சக்திவேலை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!