திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் உலா வரும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; தாவும் அணில்கள்: ஊரும் கருப்பு உடும்புகள்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் கணக்கெடுப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள செண்பகத்தோப்பு பகுதி சாம்பல்நிற அணில்கள் சரணாலயமாக அழைக்கப்பட்டு வந்தது. இதில், சாம்பல் நிற அணில்கள் அதிகமாக இருந்ததால், இப்பெயரை தமிழக அரசு சூட்டியது. இப்பகுதியில் நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலிகள் இருப்பது தெரிய வந்தது. இவைகளை பாதுகாக்கும் பொருட்டு, ஒன்றிய அரசு இந்த பகுதியை திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்தது. இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 2021 பிப்.9ல் வெளியிட்டது. இந்த புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, செந்நாய், காட்டுமாடு, யானை, மான், நீர்நாய், கேளையாடு, சருகுமான், சோலை மந்தி, இருவாச்சி, கருநாகம் ஆகிய விலங்குகள் காணப்படுகின்றன.

தமிழகத்தின் 5வது புலிகள் காப்பகம்: இது இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் 5வது புலிகள் காப்பகமாகவும் திகழ்கிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் பெரியாறு புலிகள் காப்பகத்தின் தொடர்ச்சியாக திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதன் நீட்சியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் 1.01 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாகும். இதில், 64,186.21 ஹெக்டேர் புலிகள் வாழும் பகுதியாகவும், 37,470.92 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் உள்ளது.

நவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு: இந்நிலையில், வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் அவைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அறியவும், வனத்தின் பல்வேறு பகுதிகளில் வனத்துறை சார்பில், இரவிலும் துல்லியமாக செயல்படும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், யானைகள், மான்கள், செந்நாய்கள், நாய்கள், ராஜநாகங்கள், பெரிய மலைப்பாம்புகள் என ஏராளமான வனவிலங்குகள் பதிவான. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சிறுத்தைகளும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

வனவிலங்குகளின் வேட்டை குறைவு: இது குறித்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செண்பகத்தோப்பு பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக இருந்தபோதும் சரி, புலிகள் காப்பமாக அறிவித்த பிறகும் சரி இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன அதிகாரிகள், நக்சல் தடுப்பு போலீசார் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனர். வனப்பகுதியில் சமூக விரோதிகள் யாராவது சுற்றுகிறார்களா என பகல், இரவு பாராமல் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால், வனவிலங்கு வேட்டை குறைந்துள்ளது. புலிகள் காப்பகம் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதால் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாதுகாப்பில் வைகை நீராதார பகுதிகள்: தேனி மாவட்டம், வருசநாடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வைகையாற்று தண்ணீரை, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கி வைத்து தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்துக்கும், குடிநீராதாரத்துக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த வைகையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 1000 ச.கி.மீக்கு மேல் திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் இருப்பதால், அவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் மரங்கள், தாவரங்களின் நெருக்கம் அதிகமாக எதிர்காலத்தில் வைகைக்கு இங்கிருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து வைகையின் நீராதாரம் அதிகரிக்கும்.

தமிழகத்தில் உள்ள காப்பகங்கள்: நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், விருதுநகர் மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் என 5 புலிகள் காப்பகம் அமைந்துள்ளன.

மான்களால் அதிகரிக்கும் சிறுத்தை: புலிகள் காப்பகத்தில் உள்ள மலையடிவாரப் பகுதியில் காலை, மாலை வேளைகளில் மான்கள் மற்றும் மிளா மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. தனக்கு ஏற்ற உணவு எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் சிறுத்தை உள்ளிட்ட வனஉயிரினங்களும் அதிகமாக இருக்கும். குறிப்பாக தனக்கு தேவையான உணவு, பாதுகாப்பு அதிகமாக இருக்கும் சிறுத்தைகளும் அதிகமாக இருக்கும். மேலும், பெரிய அளவிலான கருப்பு நிற உடும்புகளும் அதிகமாக உள்ளன. இவைகள் அடர்த்தியான வனப்பகுதியில் மட்டுமே காணப்படும். மேலும், மலபார் அணில்களும் அதிகளவில் காணப்படுகின்றன’ என்றார்.

Related posts

செல்லப்பிராணி மையங்களுக்கு விதிமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு முடித்துவைப்பு..!!

சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி

ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது : ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!