திருவில்லிபுத்தூர் சித்த மருத்துவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை: வேலைக்காரர் கைது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் சித்த மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடுபோனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்த மாஜி வேலைக்காரரை கைது செய்தனர். அவரிடமிருந்து நகை, பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள கீழ ரதவீதியைச் சேர்ந்தவர் டாக்டர் மணி (58). இவர், சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று இரவு மருத்துவர் மணி வீட்டில் இருந்தபோது, மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் வீட்டை பூட்டாமல் சென்றுவிட்டார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த மரப்பெட்டியை காணவில்லை.

அதில், ரூ.5 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை வைத்திருந்தார். இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் வேலை செய்த முன்னாள் ஊழியர் வத்திராயிருப்பைச் சேர்ந்த முருகேசன் (63) என்பவரை பிடித்து விசாரித்தார்.

இதில், வீடு பூட்டப்படாமல் இருந்ததை அறிந்த முருகேசன் வீட்டுக்குள் சென்று மரப்பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் திருவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து