கிழவியா? குமரியா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவண்ணாமலையில், ஒரு குகையில் இருந்தார் குகை நமச்சிவாயர். பெரிய சிவபக்தர் என்பதை விட ஒரு பெரிய சித்தர் என்று அவரை சொல்ல வேண்டும். இவர் அந்த அண்ணாமலை அண்ணல் அருளால் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். இவருடைய மகிமையை உணர்ந்து ஒரு சீடர் இவரிடம் வந்து சேர்ந்தார். அவரது பெயரும் நமச்சிவாயர் என்பதுதான். அசையாத குருபக்தியோடு குருவை போற்றி வணங்கிக் கொண்டிருந்தார் அவர். குருபக்தியாலேயே அவர் பல சித்திகளை அடைந்தார்.

ஒரு நாள் குருவின் பாதத்துக்கு அவர் சேவை செய்துகொண்டிருக்கும் போது, திடீரென்று சிரித்தார். குரு என்ன என்று கேட்டார். “திருவாரூர் ஆழி தேர் திருவிழாவில், அப்பன் ஆரூரன், தேர் பவனி வரும்போது, அவன் முன்னே ஆடிக் கொண்டிருந்த ஒரு நாட்டியப்பெண், ஜதி தவறி தடுமாறி ஆடினாள். அதை கண்டுதான் சிரித்தேன்.” என்று திருவண்ணாமலை குகையில் இருந்துகொண்டு, குருவின் பாதத்தை வணங்கிய படியே சொன்னார் நமச்சிவாயர். அதை கேட்ட குருவானவர், ஒன்றும் சொல்ல வில்லை. குரு மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

அதே திருவண்ணாமலை குகையில் மற்றொரு நாள் சரசரவென தனது வேட்டியை திடீரென்று தேய்க்க ஆரம்பித்தார் சீடர். மீண்டும் அதை பார்த்து குரு காரணம் கேட்டார். “ஒன்றும் இல்லை குருவே, தில்லை சிதம்பரத்தில் அம்பலவாணன் சந்நதியின் திரை, தீப்பற்றி எரிந்தது அதனால் அதை அணைத்தேன்” என்றார் சர்வ சகஜமாக.

பெரும் சித்தரான குரு, தனது சீடன் மெல்ல மெல்ல பக்தியில் தேறி சித்திகள் பெறுவதை கண்டு அக மகிழ்ந்தார்.கூடவே இந்த அரும்செல்வத்தை இந்த திருவண்ணாமலை குகையில் வைத்து பூட்டக் கூடாது என்றும் தனது சீடனின் மகிமை குடத்தில் இட்ட விளக்காக இல்லாமல் குன்றின் மேல் இட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டும் என்றும் அவருக்கு தோன்றியது. ஆகவே தனது சீடனை நோக்கினார் அன்பாக.

“அப்பனே நமச்சிவாயா” அன்பொழுக அழைத்தார். அதைக் கேட்டு ஓடி வந்த நமச்சிவாயர் குருவின் காலில் விழுந்தார். தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் குரு. உடன் உடலில் ஒரு தெய்வீக அலை பாய்ந்தது போல உணர்ந்தார் சீடர். உடல் சிலிர்த்த படியே குருவை நோக்கினார்.“அப்பனே நமச்சிவாயா! உன் பெயரும் நமச்சிவாயன்தான். என் பெயரும் நமச்சிவாயன் தான். அண்ணாமலை அப்பனே தந்த குகையில் அவன் அருளால் நான் இருப்பதால், நான் குகை நமச்சிவாயன். நீயோ பக்தியிலும் தவத்திலும் என்னையே மிஞ்சியவன். ஆகவே நீ குரு நமச்சிவாயன்.” என்று குரு அருளொழுக பேசினார்.

உண்மையில் குரு தன்னை விட பல சித்தி களை அடைந்தவர் என்பதை நமச்சிவாயர் நன்றாக அறிவார். ஒருமுறை, தல யாத்திரையாக குரு சென்றார். அப்போது பூந்தமல்லியை அடைந்தார். குருபூஜைக்காக, சீடர்கள் அங்கு இருந்த மொத்த பூவையும் கொண்டு வந்துவிட்டார்கள். ஊர் கோவிலில் இருந்த இறைவனுக்கு சூட்ட ஒரு பூவும் இல்லை. இதனால் அந்த ஊர்க்காரர்கள் சண்டைக்கு வந்து விட்டார்கள். இவர் பொறுமையாக, கோவிலின் இருக்கும் ஈசனும் என் பூஜையில் இருக்கும் ஈசனும் ஒன்றுதானே என்று கேட்டார்.

அதை கேட்ட ஊர்க் காரர்கள், கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். “நீ பெரிய சித்தராக இருந்தால், கோயில்சாமி மீது இருக்கும் மாலையை உன் கழுத்தில் விழச் செய் பார்க்கலாம்” என்றார்கள். இவர் பதிலேதும் சொல்லாமல் ஈசனை தியானிக்க ஆரம்பித்தார். சில நொடிகளில் மாலை தானாக வந்து அவர் கழுத்தில் விழுந்தது. இப்படி பல அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறார். குருவான குகை நமச்சிவாயர்.

அது அனைத்தும் சீடனான குரு நமச்சிவாயருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, தன்மீது இருக்கும் பாசத்தினாலோ அல்லது தன்னை சோதிக்வோ அவர் அப்படி சொல்கிறார் என்றும் சீடன் உணர்ந்தார். இருப்பினும் குருவே பேசட்டும் என்று அமைதி காத்தார். கைகட்டி வாய் பொத்தி நின்றார்.

“ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது. ஒரே இடத்தில் இரண்டு ஞானிகளும் இருக்கக்கூடாது. ஞானிகள் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியவர்கள். ஆகவே நீ சிதம்பரம் சென்று பொன்னம்பல வாணனுக்கு சேவைகள் செய்து கொண்டிரு. இதுவே என் கட்டளை” என்று கண்களால் கருணையை பொழிந்தபடி, சொன்னார் குகை நமச்சிவாயர். அதை கேட்ட சீடன் பதறினான். காற்றில்லாமல் ஒரு உயிர் வாழுமா? பசுவை பிரிந்த கன்று இன்பம் காணுமா? என்று துடித்தார். குருவை எப்படி பிரிவது என்று கலங்கினார். அதைக் கண்ட குரு, புன்னகைத்த படி பேச ஆரம்பித்தார்.

“அப்பனே கவலைப் படாமல் செல். நீ என்னை பிரியவே நேராது. அங்கே சிதம்பரத்தில், அந்த ஈசன் என் உருவில் உனக்கு காட்சி தருவார். போதுமா?” பிரிவாற்றாமையால் தவிக்கும்
சீடனுக்கு குருவின் இந்த சொல் அமுதம் போல இருந்தது. “ஆனால் குருவே! ஒருவேளை நடராஜர் உங்கள் உருவில் காட்சி தரவில்லை என்றால் நான் திரும்பி வந்து விடுவேன். அது உங்களுக்கு சம்மதம்தானே” என்று உறுதியாக கேட்டார் குரு நமச்சிவாயர்.

“அதற்கு வாய்ப்பே இருக்காது. இருப்பினும் உன் அமைதிக்காக சொல்கிறேன். நடராஜர் என்னைப்போல காட்சி தரவில்லை என்றால் நீ திரும்பி வந்துவிடலாம்” கனிவாகச் சொன்னார் குரு. அதைக் கேட்ட சீடனும் குருவின் ஆசி பெற்று குரு சொன்னது போல சிதம்பரம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தார்.வழியில் விருத்தாசலம் என்று அழைக்கப் படும் பழமலைக்கு வந்தார். பழமலை நாதன் பெருமையை சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தலத்தை, நினைத்தாலோ, அல்லது இதில் பிறந்தாலோ, அல்லது வாழ்ந்தாலோ, அல்லது இத்தலத்தை வழிபட்டாலோ, அல்லது இங்கு இறந்தாலோ முக்தி நிச்சயம்.

இங்கு மரிக்கும் ஜீவனை மடிமீது வைத்துக் கொண்டு அம்மா பழமலை நாயகி முந்தானையால் விசிறிவிட, அப்பா பழமலைநாதன் காதில் தாரகமந்திரம் ஓதி, அந்த ஜீவனுக்கு முக்தி தருவானாம். ஆகவே காசியை விட வீசம் அதிகம், பெருமை உடையது விருத்தாச்சலம்.சுந்தரர் ஒரு முறை இந்த இறைவனை பொன் வேண்டி பதிகம் பாடினார். அதனால் மனம் மகிழ்ந்த இறைவன் மலை அளவு பொன் தந்து விட்டார். இது சுந்தரருக்கு மற்றொரு சங்கடத்தை தந்தது, மலை அளவு பொன்னை தனி மனிதராக எப்படி, அவர் இருப்பிடமான திருவாரூர் கொண்டு செல்வார். மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் என்று சொல்வார்கள். மலைஅளவு கனம் இருந்தால் சொல்லவே வேண்டாம். தவித்தார். மீண்டும் பழமலை நாதனை பாடினார். இறைவன், “பழமலை அருகில் ஓடும் மணி முத்தா நதியில், பொன்னைப் போட்டுவிட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்துக்கொள்” என்றார்.

அதன்படியே செய்தார் சுந்தரர். தல யாத்திரை முடிந்து திருவாரூர் திரும்பி, கமலாலய குளத்தில் தேடினார். பொன்னை காணவில்லை. பழ மலை நாதனை, “பொன் செய்த மேனியனீர்” என்று பாடினார். பொன் கிடைத்தது.இந்த தலத்தில் எல்லாமே ஐந்து தான். ஐந்து கோபுரங்கள், ஐந்து மூர்த்திகள், இறைவனுக்கு ஐந்து பெயர்கள், ஐந்து திருச்சுற்றுகள், ஐந்து வேளை வழிபாடுகள், ஐந்து தேர்கள், ஐந்து கொடிமரங்கள், இறைவனை இங்கு தரிசித்தவர்கள் ஐவர், மண்டபங்கள் ஐந்து, ஐந்து விநாயகர்கள் என்று எல்லாமே ஐந்து தான். அப்பப்பா என் அப்பன், பழமலை நாதனின் பழம் பெருமையை ஒரு யுகம் சொன்னாலும் சொல்லி மாளாது.

இப்படிப்பட்ட விருத்தாச்சலம் வந்த குரு நமச்சிவாயருக்கு பசி எடுத்தது. பசி வந்தால் குழந்தை, பெற்ற தாயை எண்ணி அழும் இல்லையா? அது போல, இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் தாயான பராபரியை, எண்ணி தியானித்து அன்னம் கொண்டு வரச் சொல்லி வேண்டினார்.

“நன்றிபுனை யும்பெரிய நாயகியெ னுங்கிழத்தி
என்றுஞ் சிவன்பால் இடக்கிழத்தி – நின்ற
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா”

என்று பாடினார். நன்கு பாடலைக் கவனித்து பாருங்கள். “அழியாத கன்னிகை” என்பார் அபிராமி பட்டர் அந்த அம்பிகையை. என்றும் இளையவள், புதியவள் ஆனால் அரி அரன் அயன் முதலானோருக்கும் முந்தையவள். ஆகவே அவளது பழமையை எண்ணி கிழவி என்று அழைத்தார் குரு நமச்சிவாயர்.

அம்பிகையை பாடிப் பரவி பல கணங்கள் ஆகியும் அன்னையும் வரவில்லை அன்னமும் வரவில்லை. எதேனும் தவறு செய்து விட்டோமோ என்று அஞ்சியவர், அம்மையை மனமார வேண்டி “அம்மா ஏன் வரவில்லை?” என்று கேட்டார்.“நான்தான் மாலுக்கும் அயனுக்கும் மூத்தவளான கிழவி இல்லையா? கிழவி எப்படி அன்னம் கொண்டு வருவாள்? மெல்ல கைத் தடி ஊன்றி, தாள்ளாடி தள்ளாடித் தானே வருவாள்.

அப்படி வர நேரம் பிடிக்கும்தானே? ஆகவே கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.” என்று ஆகாசத்தில் இருந்து குரல் கொடுத்த அம்பிகை மெல்ல புன்னகை பூத்தாள். அப்போதுதான் நமச்சிவாயருக்குப் புரிந்தது.“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்று மாணிக்கவாசகர் சொன்னது போல, இறைவன் பழமை எல்லாவற்றிலும், பழமை வாய்ந்தவன், அதே சமயம் புதுமையான அனைத்திலும் புதுமையானவன்.

அன்னவன் மனை மங்கலத்தை கிழவி என்று மட்டும் சொல்லி விட்டது இவ்வளவு பெரிய குற்றம் என்று புரிந்தது. உடனே

“முத்த நதிசூழும் முதுகுன் றுறைவாளே
பத்தர் பணியும் பதத்தாளே – அத்தர்
இடத்தாளே மூவா முலைமேல் ஏரார
வடத்தாளே சோறு கொண்டு வா”

என்று அம்பிகையை என்றும் இளையவளாக பாடினார். உடனே அம்பிகை அவருக்கு சோறும் கொண்டு வந்தாள்.இப்படி பழமை அனைத்திலும் பழைமையாகவும், புதுமை அனைத்திலும் புதுமையாகவும் இறைவன் இருக்கிறான் என்பதை காட்ட ஒரு நாடகம் ஆடினாள் அந்த பராபரி. தான் ஆடிய திருவிளையாடலை வையம் உள்ளவரை அனைவரும் சிந்தித்து உய்ய வேண்டும் என்று, பழமலையில் அதாவது விருத்தாசலத்தில், என்றும் இளையவளாக “பாலாம்பாளாகவும்”, கிழவியாக “விருத்தாம்பாளாகவும்” காட்சி தருகிறாள். செந்தமிழில் முதுநாயகி, இளைய நாயகி என்று இரண்டு உருவில் காட்சி தருகிறாள்.

ஒரே சிவன்கோவிலில் இரண்டு அம்பிகை. வேறு எங்கும் இப்படி தரிசிக்கவே முடியாது. விழா காலங்களில் அப்பனின் இரு மருங்கிலும் அம்மை இரு வடிவம் தாங்கிநின்று பவனி
வருவதை காண கண்கோடி வேண்டும். பார்த்த உடனேயே பிறவிப்பயன் தீர்ந்து விடும். அப்படி ஒரு கொள்ளை அழகு. இந்த அம்பிகை அருளால் இதுபோல பல பேறு பெற்றவர்கள், இன்றளவும் பெருகிய வண்ணம் இருக்கிறார்கள். நாமும் அவளை வணங்கி அந்த பட்டியலில் சேருவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Related posts

தெளிவு பெறுவோம்

திருக்குறளில் உலகம்!

எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம்