திருச்செங்கோடு அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1.17 கோடி மோசடி கிளார்க், செயலாளர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் டெபாசிட் செய்த ரூ.1.17 கோடியை மோசடி செய்த வங்கி செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் 2700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் வங்கியில், தங்களது பணத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளனர்.

அவ்வாறு வைத்திருந்த பணத்தை, அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த கிளார்க் பெரியசாமி (50), வங்கி செயலாளர் பெரியசாமி (49) ஆகியோர், சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், கடந்த 3 மாதங்களுக்கு முன், விவசாயிகள் வங்கி முன் திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். ஆனால் 97 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மாதம் 21ம் தேதி விவசாயிகள் மீண்டும் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சேமிப்பு கணக்கு, பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையில் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது தெரியவந்தது. இதன் மூலம் ரூ.1.17 கோடி முறைகேடு நடந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணைப்பதிவாளர் கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சங்க செயலாளர் பெரியசாமி மற்றும் எழுத்தர் பெரியசாமி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

 

Related posts

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை

அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு!

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம்!