சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவில் 13ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் மேற்கொள்ளும் பச்சை பட்டினிவிரதம் மேற்கொள்வது வழக்கம். தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காக அம்மனே விரதம் மேற்கொள்வது இந்த கோயிலில் மட்டுமே. இந்த பச்சை பட்டினி விரதம் கடந்த 9ம் தேதி பூர்த்தியடைந்தது. அன்று காலை சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் கடந்த 18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் 11ம் திருநாளான 19ம் தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12ம் திருநாளான நேற்றுமுன்தினம் அமமன் முத்து பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி காலை 12.01 மணிக்கு அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் கண்டருளினார். இரவு 8 மணிக்கு தெப்ப மிதவையில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன் 3 முறை மைய மண்டபத்தை வலம் வந்தார். மைய மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தெப்பத்தில் இருந்து புறப்பட்ட அம்மன் வீதி உலா வந்து மூலஸ்தானம் வந்தடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்