தேனிகாரருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் ஆதரவாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தே னிக்காரர் பக்கம் இருந்தால் வீடு, பேங்க் பேலன்ஸ் எல்லாம் இழக்க வேண்டியதுதான் என்று யாரு யாரை எச்சரித்தாங்களாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் சமீபத்தில் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தேனிக்காரர் அணியை சேர்ந்த மாஜி எம்எல்ஏவும், சேலத்துக்காரர் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளரின் மகன், மன்னர் வாரிசு மாஜி எம்எல்ஏ ஆகியோர் ஒருவருக்கொருவர் தனியாக உட்கார்ந்து பரஸ்பரம் நலம் விசாரிச்சாங்களாம். பின்னர் மூன்று பேரும் மணிக்கணக்கில் தங்கள் அரசியல் எதிர்காலத்தை பற்றி பேசினாங்களாம். அப்போது தேனிக்காரரின் ஆதரவாளர் மாஜி எம்எல்ஏ, மலைக்கோட்டை மாநகரில் நடந்த மாநாட்டுக்கு ‘வைட்டமின் ப’ செலவு செய்து தொண்டர்களை அழைத்து சென்றேன். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்கள் வராமல் போனதற்கு நானா காரணம்.

அரசியல் காட்சிகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்குது. இது தெரியாமல், மன்னர் மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வரவில்லை என வைத்தியானவர், என் மீது கோபத்தில் இருக்கிறார். இது எப்படி நியாயமாகும். இவரின் ரகசிய உத்தரவால் 2ம் நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் கூட தன்னிடம் பேசுவது இல்லை. எங்கே போனாலும் தனியாகத்தான் போய் வருகிறாராம். வங்கியில் இருந்த ‘வைட்டமின் ப’ வையும் மாநாட்டுக்காக செலவு செய்து விட்டேன். இப்போது கையில பணம் இல்லாததால என்னை யாரும் மதிக்கவில்லை என புலம்பியுள்ளார். அப்போது சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள், மதிக்காத இடத்தில் ஏன் இருக்கீங்க.. தேனிக்காரர், வைத்தியானவரையும் நம்பி இருந்தால் இருப்பதையும் விற்று நடுத்தெருவுக்கு சீக்கிரம் வந்து விடுவிங்க.

பேசாமல் சேலம் அணிக்கு வந்து விட வேண்டியது தானே. எதிர்பார்த்த அளவுக்கு ‘வைட்டமின் ப’ கிடைப்பதோடு மரியாதையும் கிடைக்கும். விரைவில் நல்ல முடிவு சொல்லுங்க என்று மீன் பிடிப்பதுபோல தேனி ஆதரவாளரை பிடிக்க முயற்சிக்கிறாங்க… இன்னும் தேனிகாரரை நம்பி அணியில் இருந்தால் கடன்காரராக இருக்க வேண்டியது தான்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ எழுந்து நிற்க முடியவில்லை என்று தெரிந்த பிறகும், கட்சியை தாங்கி நிற்பேன் என்று தேனிக்காரர் துடிப்பது ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்ற துடிப்பு தேனிக்காரரிடம் இன்னமும் அடங்கவில்லையாம். இதற்காக முதலில் சின்ன மம்மியின் தயவை எதிர்பார்த்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் சரியாகத்தான் இருந்தது. தற்போது தேனிக்காரரை சின்ன மம்மி நம்பவில்லையாம்.

இவரை நம்பித்தான் நாம் இந்த நிலைமைக்கு வந்தோம் என முடிவு செய்து, தேனிகாரரை தன் பக்கமே வரக்கூடாது என்று சொல்லிட்டாராம். தற்போது வரை தேனிக்காரர் நம்பி இருப்பது தாமரை மேலிடத்தை தானாம். நீதிமன்ற தீர்ப்பு இவர் எதிர்பார்த்தபடி வரவில்லை. அடுத்தடுத்து சறுக்கல்கள் தொடர்வதால் அவருடன் உள்ள நிர்வாகிகளில் பலர் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம். சேலத்துக்காரர் அணிக்கு தாவ சரியான ஒரு காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். ‘இதேநிலை தொடர்ந்தால், அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம். அதிரடியாக ஏதாவது ஒரு முடிவு எடுங்க’ என்று அவரது ஆதரவாளர்கள் குடைந்து எடுக்கிறார்களாம். இல்லாவிட்டால் அணி தாவல், கட்சி தாவல் என்று தேனிக்காரரை மிரட்டுகிறார்களாம். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதி தீர்ப்பு வரும் வரை, நாங்களும் இலை கட்சி தான் என கூறிக்கொண்டே காலத்தை கடத்தலாம்..

எதுவும் ஆகாவிட்டால், தாமரையுடன் ஐக்கியமாகி விடலாம் அல்லது தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என நிலையான முடிவு இல்லாமல், நெருங்கிய ஆதரவாளர்கள், குடும்பத்தினருடன் கூடிப் பேசினாராம். அதேசமயம், ‘இனியும் இப்படியே கட்சி பணியில் மந்த நிலை நீடித்தால், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்காது. உடனே தாமரையுடன் பேசி நல்ல முடிவு எடுங்க…’ என்று ஆதரவாளர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்களாம். மதுரையில் சேலம்காரர் நடத்த உள்ள இலை கட்சி மாநாட்டின் நிலைமையை அறிந்து, அதன் பிறகு முடிவு எடுக்கலாம்னு ஆதரவாளர்களை அமைதி படுத்தினாராம். ஆனால் அவருடன் இருந்து கொண்டே தேனி தரப்பு ஆட்கள் வேறு கட்சி அல்லது அணி தாவ முயற்சி செய்து ெகாண்டிருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ சேலம்காரரின் டபுள் ஆக்டிங்கில் மாட்டிக் கொண்டு முழித்த இலை கட்சி நபரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் தேனிக்காரர் அணியில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்ற ரீதியில் சேலம்காரர் அவ்வப்போது அழைப்பு விடுத்து பச்சைக்கொடி காட்டி வந்தாலும் தேனிக்காரர்களின் தீவிர ஆதரவாளர்களை அடையாளம் கண்டு வைத்து அவர்களுக்கு சிகப்பு கொடியையும் காட்டுறாராம். குமரி மாவட்டத்தை சேர்ந்த தேனிக்காரரின் தீவிர ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளரான மன்னர் பெயரை கொண்டவர் சேலம்காரர் அணியில் இணைய திட்டம் போட்டார்.

முன்னாள் அமைச்சரானவர் முயற்சியில் அப்பாயின்மென்ட் வரை கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் ஒரு நாள் முன்பு அழைத்து சந்திப்பு வேண்டாம் என்று சேலம்காரர் தவிர்த்துவிட்டாராம். என்னதான் சப்ஜெக்ட் என்றால் தேனிகாரருடன் இணைந்து சேலம்காரருக்கு எதிராக 18 பேர் சேர்ந்து வழக்கு தொடர்ந்ததில் குமரிகாரரின் பெயரும் இருக்காம். இதனை தெரிந்துகொண்ட சேலம்காரர், தேனிக்காரர் அவரது அணியைவிட்டு நீக்கினால் பின்னர் பார்க்காலாம் என்ற ரீதியில் பதில் அளித்தாராம். இதனால் முன்னாள் அமைச்சரானவர் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம் என்கிறது இலைகட்சி வட்டாரங்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு