டெலிகிராம் ஆப்பில் பகுதி நேர வேலை என மெசேஜ் அனுப்பி ஆன்லைனில் ரூ.25 கோடி மோசடி செய்த நெல்லை வாலிபர் கைது

*லேப்டாப், சிம்கார்டுகள், போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல்

தூத்துக்குடி : ஆன்லைன் மூலம் ரூ.25 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடி சின்னமணிநகரைச் சேர்ந்தவர் தங்கதுரை (52). இவரது டெலிகிராம் ஆப்பில் பகுதிநேர வேலை தேவையா என்ற விளம்பரம் வந்துள்ளது.

இதைபார்த்த தங்கதுரை, அந்த மெசேஜ் வந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய நபர் தங்கள் கம்பெனி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மேம்படுத்துவதற்காக, அதிகம் பேர் கம்பெனியின் இணையதளத்தை பார்த்து ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இதுபோன்று ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதற்கு கமிஷன் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்கதுரை ஸ்டார் ரேட்டிங் செய்துள்ளார். முதலில் அவருக்கு ரூ.1100, ரூ.1500 கமிஷனாக கொடுத்து நம்ப வைத்துள்ளனர். பின்னர் அதிக கமிஷன் வேண்டும் என்றால் பணம் முதலீடு செய்து, கம்பெனி கூறும் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று தங்கதுரையிடம் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கூறிய வலைதளத்தில் தங்கதுரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45.92 லட்சம் செலுத்தியுள்ளார். இதற்காக கம்பெனியினர் பல பணிகளையும் வழங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறியது போன்று கமிஷன் வழங்கப்படவில்லை. இதனால் தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கதுரை, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நெல்லை மானூர் அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம்குமார் (31) என்பவர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்ப்களையும் பறிமுதல் செய்தனர்.

எலியாஸ் பிரேம்குமார் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் பல வங்கிகளில் 21 வங்கி கணக்குகளை மோசடிக்காக பயன்படுத்தி உள்ளார். அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூ.25 கோடி பணம் பரிவர்த்தனை நடந்து இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

Related posts

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது

பொள்ளாச்சியில் போக்குவரத்து பாதிப்பு

‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்