டாஸ்மாக் திரும்பப்பெறும் காலி பாட்டில் டெண்டர் அறிக்கை தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறப்படும் காலி பாட்டில்களை விற்பதற்கான டெண்டர் விதிகள் மற்றும் விலையையும் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மலை வாசஸ்தலங்களில் அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இந்த திட்டத்தை கோவை உள்ளிட்ட இரு மாவட்டங்களிலும் அமல்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு கூறினாலும், அந்த பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கான இடவசதி ஏற்பாடு செய்வதில் பெரும் சிக்கலாக உள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், நிறைய வருமானம் ஈட்டும் துறையில் கட்டிடம் கட்டுவது சிரமமா. எனவே, பாட்டில்களை திரும்பப் பெறுவது கூடுதல் சுமையாக இருப்பதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தீர்வு காண்பது குறித்தும், அந்த பாட்டில்களை விற்பதற்கான டெண்டர் விதிகள் மற்றும் விலையையும் டாஸ்மாக் நிறுவனம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிவு..!!

ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு: நாளையுடன் கண்காட்சி நிறைவு