ஓசியில் மது தர மறுத்ததால் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: வாலிபர் கைது

அருப்புக்கோட்டை: டாஸ்மாக் கடையில் ஓசியில் மது தர மறுத்ததால் சேல்ஸ்ேமன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, பாலவநத்தத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக மாரீஸ்வரன், சேல்ஸ்மேனாக அருப்புக்கோட்டை மறவர்பெருங்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் (47) ஆகியோர் உள்ளனர்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் இருவரும் பணியில் இருந்தனர். அப்போது பாலவநத்தம் அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த வசந்தகுமார் (23) என்பவர் வந்து ஓசியாக பிராந்தி பாட்டில் கேட்டுள்ளார். இதற்கு செந்தில்குமார் பணமின்றி தர மறுத்துள்ளார். உடனே வசந்தகுமார், ‘நான் யார் தெரியுமா? ஓசியில் பிராந்தி பாட்டில் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்கிறேன் பார் என கூறிவிட்டு சென்றுவிட்டார். மாலை 3.30 மணியளவில் மீண்டும் வந்த வசந்தகுமார் ஓசியில் பிராந்தி பாட்டில் கேட்டுள்ளார்.

செந்தில்குமார் தர மறுக்கவே வசந்தகுமார் பெட்ரோல் நிரப்பி வந்த பாட்டிலை அவர் மீது வீசினார். அவர் ஒதுங்கியதால் அவர் மீது படவில்லை. இதையடுத்து வசந்தகுமார் கீழே விழுந்த பாட்டிலை உடைத்து செந்தில்குமாரை குத்த முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்ததால் செந்தில்குமார் தப்பினார். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு