தமிழ்நாடு முன்னோடி திட்டத்தை போன்று தெலங்கானாவில் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்

திருமலை: தமிழ்நாடு முன்னோடி திட்டத்தை போன்று தெலங்கானாவில் மகாலட்சுமி இலவச பேருந்து திட்டத்தை முதல்வர் ரேவந்த் தொடங்கி வைத்தார். தெலங்கானா தேர்தல் பிரசாரத்தின்போது ‘தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்’ போல் தெலங்கானாவில் ‘மகாலஷ்மி இலவச பேருந்து திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ரேவந்த் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி தெலங்கானா மாநிலத்தில் மகாலஷ்மி இலவச பேருந்து திட்டத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று சட்டசபை வளாகத்தில் இருந்து துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், மாநிலத்தின் கிராமிய, டவுன், எக்ஸ்பிரஸ் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள், குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தார். இதனைதொடர்ந்து ராஜீவ் ஆரோக்ய  காப்பீட்டு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்ட லோகோவை முதல்வர் ரேவந்த் அறிமுகப்படுத்தினார். இன்று சட்டசபை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே விகாராபாத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசாத் குமாரை சட்டப் பேரவைத் தலைவராக அறிவித்துள்ளதால் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

* புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

தெலங்கானா மாநிலத்தின் 3வது சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கியது. இடைக்கால சபாநாயகராக எம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி அறிவிக்கப்பட்டு அவருக்கு ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதில் முதல்வர் ரேவந்த்ரெட்டி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி பதவி பிரமாணம் செய்து வைத்தால் நான் பதவியேற்க மாட்டேன் என கோஷாமஹால் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங் அறிவித்தார். இதையடுத்து பாஜ எம்எல்ஏக்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. அதேபோல் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் அவரது மகன் கே.டி.ராமாராவ் ஆகியோரும் பதவி ஏற்கவில்லை.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்