தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியுதவிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”- க்கு தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு.

மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும், அரசிற்கும், பங்குதாரர்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறக்கூடிய நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும், “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 8ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் உருவாக்கம், உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் குழுவின் செயல்பாடுகள் ஆகியவை தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை துணைத் தலைவராகவும் கொண்ட ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு