தமிழகத்தில் அதிகமாக மதுகுடிப்பவர்கள் வன்னியர்கள்தான்: அன்புமணி பரபரப்பு பேச்சு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டி முதல்வர் ஸ்டாலினுக்கு கையொப்பமிட்டு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில் அருகே நேற்று நடந்தது. அப்போது, பாமக தலைவர் அன்புமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டி, வீடு வீடாக சென்று தட்டச்சு செய்த மனுவை கொடுத்து அதில் கையொப்பமிட்டு முதல்வருக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில், முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிக்கும் கடிதங்களை அனுப்பி உள்ளோம். இரண்டு, நாட்களுக்கு முன்பு முதல்வருக்கும், ஓய்வுபெற்ற நீதிபதிக்கும் எனது குடும்பம் சார்பில் கடிதங்களை அனுப்பி இருக்கிறோம். வன்னியர் சமுதாயம் மட்டுமின்றி, அனைத்து மதத்தினர் மற்றும் சாதியினர் இதுபோன்று கடிதங்களை முதல்வருக்கு அனுப்பி வருகின்றனர். லட்சக்கணக்கான, கடிதங்கள் 3நாட்களில் போய் சேர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக குடிசை வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிகமாக கைநாட்டு வைப்பார்கள் மற்றும் கூலி தொழிலாளியாக இருக்கிறார்கள். கல் உடைப்பது, ரோடு போடும் வேலையில் வன்னியர்கள் தான் அதிகம் உள்ளனர். அதிகமாக மது குடிப்பவர்கள் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான். தற்போதுள்ள, சூழ்நிலையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதுதான் சமூக நீதி, இதுதான் நியாயம் இந்த நியாயத்தை எப்போதே செய்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சொல்லி ஒரு வருடமாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். தமிழ்நாட்டில் போராட்டம் என்றால் அது பாமகதான். அந்த அளவுக்கு எங்களை இந்த அரசு தள்ள வேண்டாம்.

Related posts

நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!

இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு

வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை