சமுதாய வாக்கு எதிராக திரும்பியதால நாட்டாமை தரப்பு குழப்பத்தில் இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கூட்டம் சேர்க்க மட்டும்தான் எங்கள யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு வடமாவட்ட தேர்தல் களத்துல புலம்பல் சத்தம் அதிகமா கேட்குதாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தாமரை தலைகள் புறக்கணிப்பின் உச்சத்தில் இருக்காங்கன்னு கூட்டணிகள் புலம்பும் சத்தம் தேர்தல் களத்தில் கேட்க ஆரம்பிச்சிருக்காம்.. தமிழகத்தை பொறுத்தவரை வாக்கு விகிதத்தில் 5 சதவீதத்தை கூட எட்டாதது தாமரை கட்சி. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் ஏதாவது பலன் கிடைக்கும் என்றுதான் அவர்களிடம் கூட்டணி வைத்தோம்.

அதுவும் இந்த கூட்டணியில் உள்ள மாம்பழம், சைக்கிள், குக்கர்னு யாரும் ஓடோடிச்சென்று ஆதரவு கொடுக்கவில்லை. உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் பயந்துபோய்தான் கூட்டணியே உருவாச்சு.. இப்போ எங்கள் கட்சிகளின் தொண்டர்களை அவர்கள் எல்லா விதத்திலும் எலக்‌ஷன் ஒர்க்குக்கு நல்லா பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க.. ஆனா, அந்த கட்சியின் தேசிய தலைவர்களின் பிரசாரமும், ரோடு ஷோவும் அவங்க கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை மையமாக வச்சு மட்டுமே நடக்குது.. அவங்க கட்சி வேட்பாளர்களோடு பத்தோடு பதினொன்று என்ற ரீதியில்தான் எங்க வேட்பாளர்களை நிறுத்தி வச்சிருக்காங்க..

பல இடங்களில் தாமரை தலைகள் எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கூட்டம் சேர்க்க மட்டும்தான் எங்களை யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு வட மாவட்ட தேர்தல் களத்தில் இந்த புலம்பல் சத்தம் ரொம்பவே ஒலிக்க ஆரம்பிச்சிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சிண்டு முடியும் வேலை தோல்வியால விரக்தியில் தவிக்குதாமே தாமரை தரப்பு தெரியுமா?’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது அரசியல் அனுபவங்களை அள்ளித்தரும் புதுச்சேரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சில வினோதங்கள் அரங்கேறிக்கிட்டு இருக்கு.. அந்த வகையில ஆளுங்கட்சி தரப்பில் களத்தில் உள்ள பாஜ தரப்பு, எப்படியாவது மதச்சார்பற்ற அணியில் உள்ள ஓட்டுகளை சிதறடித்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு திரைமறைவு வேலைகளை நகர்த்தியது.. முதலில் நடுநிலை வகிக்கும் சுயேச்சை எம்எல்ஏவைக் கொண்டு பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி தனி அணியை உருவாக்க நினைத்த முயற்சி டமால்னு போச்சாம்..

தங்களது திட்டத்துக்கு மாறா, மதச்சார்பற்ற அணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை சுயேச்சை எம்எல்ஏ தரப்பு எடுக்கவே தொகுதி கள பிரச்னையை முன்வைத்து மீண்டும் அந்த கூட்டணிக்குள் சிண்டுமுடியும் வேலையை கையில் எடுத்தது.. அதற்கு ஊதுகுழலா அதிமுகவில் ஒரு தரப்பையும் பயன்படுத்தி மோதலை ஏற்படுத்தி விடலாம்னு முனைப்பு காட்டியது.. ஆனால் தொகுதி கள நிலவரமும் மொத்தமா பாஜ தரப்புக்கு எதிரா மாறிவிட, கடும் விரக்தியில் இருக்கிறதாம் வேட்பாளர் தரப்பு..

மாறாக சுயேச்சை எம்எல்ஏ தரப்பும் போதாக்குறைக்கு மற்ற பகுதிகளிலும் கைக்கு தோள்கொடுத்து வருவதால் கிறுகிறுத்து போயுள்ளதாம் தாமரை..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி பார்ட்டியோட வேட்பாளரு இன்னமும் பல ஏரியாக்களை எட்டிக்கூட பார்க்கவே இல்லையாமே..’’ என்னவாம் என்றார் பீட்டர்மாமா. ‘‘இன்னும் ஒரு வாரத்துல தமிழ்நாட்டுல எலக்‌ஷன் நடக்க போகுது. இதுக்காக இருக்குற எல்லாக் கட்சிக்காரங்களும் கொளுத்துற வெயில்ல தீயா வேலை செஞ்சிக்கிட்டு வர்றாங்க.. இதுல பாதியான கோணம் தொகுதியில நிலவரம் வேற மாதிரி இருக்குதாம்..

அந்த தொகுதியில, தமிழ்நாட்டுல பிரதான கட்சிகள் இரண்டும் களத்தில் தீவிரம் காட்டி வர்ற நிலையில, மலர் பார்ட்டி திடீர் கூட்டணியான மாங்கனி பார்ட்டியோட வேட்பாளரு, இன்னமும் பல சட்டமன்ற தொகுதியையும், ஏரியாக்களையும், எட்டிக்கூட பார்க்கவே இல்லையாம்.. இதுல குறிப்பா ஆறு காடான சட்டமன்ற தொகுதியில இருக்குற கணியம்பாடி, திமிரி, காட்டுப்பாடி போன்ற ஒன்றியங்கள்ல மாங்கனியோட வாசனையே வீச வில்லையாம்.. மலர் கட்சி பார்ட்டிகளும், மாங்கனி கட்சி தொண்டர்களும் என்ன செய்றதுன்னு தெரியலையேனு புலம்பி தவிச்சிக்கிட்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சமுதாய வாக்கு எதிராக திரும்பியதால் நாட்டாமை தரப்பு குழம்பிப்போய் இருக்குதாமே..’’ என கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்ட தொகுதியில் தாமரை கட்சியின் சார்பில் நாட்டாமை நடிகரின் மனைவி போட்டியிடுகிறார். தொகுதிக்கு புதுசு என்பதால் சமுதாய ரீதியான வாக்குகளை பெறுவது என்ற நோக்கத்திலேயே அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறாராம்.. இதற்காக தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் குறிப்பிட்ட சமுதாய தலைவர்களையும், நிர்வாகிகளையும் கணவன், மனைவி இருவரும் சந்தித்து பேசினார்களாம்..

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாம்.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாட்டாமை சமுதாய மக்கள் கொதித்துப் போய்விட்டனராம்.. தனியாக கட்சி நடத்தியபோது வெளியில் இருந்து ஆதரவளித்த பலர், தாமரையுடன் ஐக்கியமானதை விரும்பவில்லையாம்.. ஏற்கனவே காமராஜருக்கு மணிமண்டபம் அமைப்பதாக கூறிவிட்டு, முழுமையான பணிகள் முடியாமல் திறந்ததால் பலரும் அதிருப்தியில் உள்ளனராம்..

இதெல்லாம் நாட்டாமை தரப்புக்கு எதிரா திரும்பியிருக்காம்.. நாட்டாமை தரப்புக்கு இந்த நிலை என்றால், அவரது மனைவி குறிவைத்த சமுதாய வாக்குகளை கேப்டன் மகன் பங்கு பிரிக்க வந்துள்ளாராம்.. இதனால் செய்வதறியாது குழம்பி போயுள்ள நாட்டாமை தரப்பு 3வது இடமாவது கிடைக்குமா என்ற தவிப்பில்தான் இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு