இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் தயங்கியதால் தேர்தல் களத்தில் குதித்த தொழிலதிபர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கிரிவலம் மாவட்டத்துல பிளையிங் டீம் சம்திங் வேலைய தொடங்கிட்டாங்களாமே..’’ தெரியுமா? எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலையொட்டி முக்கிய கட்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட தங்களது வேட்பாளர்களை அறிவிச்சிட்டாங்க.. வேட்பாளர் அறிமுகக்கூட்டம் என்று தேர்தல் வேலைகளிலும் தீவிரமாக இறங்கிட்டாங்க… அதேசமயம் தேர்தல் ஆணையம் சார்புல, வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புறது, வாகன சோதனை நடத்துறதுன்னு பணிகள் ரொம்பவே ஜோரா நடந்து வருகிறது..

இதுல சில அதிகாரிங்க அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்திங் பார்க்குறாங்களாம்.. கிரிவலம் மாவட்டத்துல செய் என்று தொடங்கி ஆறுல முடியுற பெயரைக் கொண்ட ஊர்ல பிளையிங் படையில இந்த சம்திங் மேட்டர் நடக்குதாம்.. தர்பூசணி, மாங்காய், திராட்சைனு பழ வகைகள், தின் பண்டங்கள் போற லோடு ஆட்டோக்களை கூட மடக்கி சோதனை செய்றாங்களாம்.. இதுபோல ஐட்டங்கள் வந்தா, தேவையானதை எடுத்துக்குறாங்களாம்.. எதிர்த்து கேட்டா, வண்டிய தேர்தல் அதிகாரிகிட்ட விடுன்னு மிரட்டுறாங்களாம்..

திருமணத்துக்கு முகூர்த்த புடவை எடுக்க போறவங்ககிட்ட 2 கே டூ 5 கே வரைக்கும் வாங்குறாங்களாம்.. இல்லைன்னா, விதிமீறல்னு மிரட்டி சம்திங் பார்த்துடுறாங்களாம்.. இப்படி தேர்தல்ல இந்த வேலை தீவிரமாக போய்க்கிட்டிருக்குதாம்.. சம்பந்தப்பட்ட அதிகாரிங்க, உடனே விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு ஜனங்க குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வசூல் விவகாரத்தில் இணைந்த கைகளால கோப்புகள் மலைபோல தேங்க ஆரம்பிச்சிருக்காமே..” எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவையில் உள்ள உள்ளூர் திட்டக்குழும அதிகாரி ஒருவர் நான்கெழுத்து பெயர் கொண்டவர், விண்ணப்பதாரர் மற்றும் லைசென்ஸ் பில்டிங் சர்வேயர், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் என பலரையும் நடையாய் நடக்க விடுகிறாராம்.. கோப்புகள் எதுவாக இருந்தாலும் அதை உடனுக்குடன் சரிபார்த்து கொடுக்காமல் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறாராம்.. எஸ்.பி.எப் நம்பர் மற்றும் வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்தால், மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து விடுகிறாராம்..

கட்டிட அனுமதி மற்றும் வரைபட அனுமதி பெறுவதற்கு, ‘சோல்டு பிராப்பர்ட்டி பிரேம் ஒர்க்’ என்று அழைக்கப்படும் எஸ்.பி.எப் என்ற நம்பர் வாங்க வேண்டும்னு கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் உள்ள மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு அதிகாரி, புதிதாக ஒரு விதிமுறையை அமல்படுத்தி இருக்கிறாராம்.. அதனால், இதுபோன்ற விண்ணப்பம் ஆயிரக்கணக்கில் இந்த அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கிறதாம்.. பல மாத காலம் உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் கோப்புகளை முடக்கி வைப்பதால், சாதாரண 500 சதுரடி மற்றும் 1,000 சதுரடிக்கு விண்ணப்பிக்கும் நபர்களும் ரொம்பவே கஷ்டத்துக்கு ஆளாகிறாங்க…

உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் இருந்து உடனுக்குடன் எஸ்பிஎப் எண் மற்றும் ஆர்டர் கொடுத்தால்தான், மாநகராட்சியில் கட்டிட வரைபட அனுமதி பெற முடிகிறது. ரெண்டு துறை அதிகாரிகளும் வசூல் விவகாரத்தில் அன்கோ போட்டு செயல்படுவதால் கோப்புகள் அனைத்தும் மலைபோல் குவியுதாம்.. பூனைக்கு மணி கட்டுபவர்கள் யாரோ என்ற எதிர்பார்ப்பில் விண்ணப்பதாரர்கள் காத்திருக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முக்கிய நிர்வாகிங்க தயக்கம் காட்டியதால தொழிலதிபர் ஒருத்தர் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேர்தல் களத்தில் குதிச்சிருக்காராமே’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாடாளுமன்ற தேர்தலில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் தயக்கம் காட்டி வந்தாங்க… இதேபோல், டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட தொகுதியில் முக்கிய நிர்வாகிகள் பலரும் தேர்தலில் நின்றால் தோல்வி உறுதி என அவர்களாகவே விலகிக்கொண்டார்கள்.. சில நிர்வாகிகள் பணம் செலவு செய்ய முடியாது என ஒதுங்கிக்கொண்டாங்க..

இதனால டெக்ஸ்டைல் தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் தலைமை திணறியது. மாஜி அமைச்சர் ‘விஜயமானவருக்கு’ தலைமையிடத்தில் இருந்து நெருக்கடி ஏற்பட்டது. சேலத்துக்காரரும் விஜயமானவர் மீது உச்சக்கட்ட டென்சனில் இருந்து வந்தாரு.. இதற்கிடையில தேர்தலில் நல்ல செலவு செய்யக்கூடிய தொழிலதிபர் ஒருவரை டெக்ஸ்டைல் தொகுதியில் களமிறக்க சேலத்துக்காரர் திடீரென முடிவு செய்திருக்கிறாரு.. இதனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடைசி நேரத்தில் தொழிலதிபர் ஒருவர் இலைக்கட்சி சார்பில் போட்டியிட களமிறக்கப்பட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

கள்ளக்குறிச்சி அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தில் கைது

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்