நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்; மனைவி கழுத்தறுத்து கொலை; கணவன் கைது

சென்னை: சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு 14 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ், அதே பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பண பற்றாக்குறை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடிவிட்டார். இதனால் குடும்ப செலவுக்காக சியாமளா தேவி, வீட்டின் அருகே அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சியாமளா தேவியின் நடத்தையில் சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். நேற்றிரவு வழக்கம் போல அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ், சியாமளா தேவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்றார். அங்கு, காய்கறிவெட்ட பயன்படுத்தக்கூடிய கத்தியை எடுத்து கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் ரத்தம் பீறிட்டது. அலறி துடித்தார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

சிறிது நேரத்தில், ‘அய்யோ இப்படி செய்து விட்டோமே’ என்ற அதிர்ச்சியில் சியாமளா தேவியின் உடல் அருகில் அமர்ந்து கதறி அழுதார். பின்னர் கத்தியை அங்கேயே வைத்துவிட்டு, கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி சென்றார். சிறிது நேரத்தில், மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த மகன்கள் எழுந்து படுக்கை அறைக்கு சென்றனர். அப்போதுதான் ரத்த வெள்ளத்தில் சியாமளா கிடந்ததை பார்த்து சத்தம் போட்டனர். பின்னர் கதவை திறக்க முயன்றபோது வெளிப்புறமாக பூட்டியிருந்தது. கதவை வேகமாக தட்டியபோது, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். கதவை திறக்க முடியாததால் கொரட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே இன்ஸ்ெபக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சியாமளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சியாமளா தேவியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொரட்டூர் கெனால் ரோடு மதுபான கூடம் பின்புறத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த சுரேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கொரட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கோடை மழையை எதிர்கொள்வது எப்படி?

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஜுன் 30 வரை அவகாசம்.! அமைச்சர் சேகர்பாபு தகவல்

திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்த விவகாரத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம்