ஆலைக்குச் சென்றாலும் அசத்தல் லாபம்… நாட்டுச் சர்க்கரையாகவும் நல்ல லாபம்…

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி அருகில் உள்ள பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. ஏக்கருக்கு 80 மூட்டை நெல் சாகுபடி செய்து மாவட்ட அளவில் அதிக நெல் சாகுபடி செய்த விவசாயி என்ற பெயரெடுத்ததோடு, சேலம் மாவட்ட கலெக்டரிடம் ரூ.25 ஆயிரம் ஊக்கப்பரிசும் பெற்ற இந்த வீராசாமி ஒரு விவரமான விவசாயியாக திகழ்கிறார். பிஏ, பிஎட் படித்த இந்தப் பட்டதாரி விவசாயி, தனது நிலத்தில் வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களைத் தொடர்ந்து பயிரிட்டு வருகிறார். இதில் கூடுதல் மகசூல் எடுத்து மற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்மாதிரி விவசாயியாகவும் விளங்குகிறார். இவரைச் சந்திக்க பழையூர் கிராமத்திற்குச் சென்றோம். செம்மண்ணும், களி மண்ணும் மிகுந்திருக்கும் இந்தக் கிராமம் முழுக்கவே விவசாயம் கொடிகட்டிப் பறக்கிறது. நெல், கரும்பு, மஞ்சள், வாழை என திரும்பும் பக்கமெல்லாம் பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. இதற்கிடையே தனது கரும்பு வயலில் அறுவடைப் பணியில் குடும்பத் துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீராசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

“ நான் நடக்கப் பழகியதே எங்களது விவசாய நிலத்தில்தான். சிறுவயதில் இருந்தே விவசாயத்தைப் பார்த்துதான் வளர்கிறேன். எனது அப்பா அவரது காலத்தில் விவசாயம் செய்யும்போது பெரும்பாலும் நெல்தான் பயிரிடுவார். அப்போது தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. அணையில் இருந்து பாசனநீரை எப்போது திறந்துவிடுவார்களோ, அப்போதுதான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது வயலில் அதிகபட்ச வேலை செய்தது நானாகத்தான் இருப்பேன். அங்கிருந்தே நான் விவசாயத்தைக் கற்றுக்கொண்டேன். பிறகு கல்லூரிப் படிப்புக்காக சென்னை சென்றபோதும், வேலைக்காக வெளியூரில் இருந்தபோதும் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து விவசாயத்தில் ஈடுபடுவேன். ஒரு கட்டத்தில் வெளியே எங்கும் வேலைக்குச் செல்லாமல் முழுநேர விவசாயத்தைத் தொடரலாம் என முடிவெடுத்து ஊருக்கு வந்துவிட்டேன்.

நான் பி.ஏ, பி.எட் படித்திருப்பதால் எங்கள் ஊர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக தற்போது பணியில் இருக்கிறேன். பள்ளி நேரம் போக மற்ற நேரமெல்லாம் விவசாயம்தான். அப்பாவுக்குச் சொந்தமான நிலம் மற்றும் எனக்குச் சொந்தமான நிலம் என மொத்தமாக 6 1/2 ஏக்கர் இருக்கிறது. இந்த நிலத்தில் முழுவதுமே இப்போது விவசாயம் செய்துவருகிறேன். எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும் அதில் வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்போம். மஞ்சள், நெல் போன்ற பயிர்களில் அதிக மகசூல் எடுத்திருக்கிறேன். அதற்காக மாவட்ட கலெக்டரிடம் பரிசும் வாங்கி இருக்கிறேன். இப்போது எனது நிலத்தில் வாழை மற்றும் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். இரண்டுமே அறுவடை செய்யும் நிலையில் இருக்கின்றன.

இரண்டு ஏக்கரில் கதலி வாழையும், நான்கு ஏக்கரில் கரும்பும் போட்டிருக்கிறேன். வாழையைப் பொருத்தவரை அதுவொரு ஒருவருடப் பயிர். எனது நிலத்தில் வாழையை நடுவதற்கு முன்பாக ஒருமுறை நிலத்தை நன்றாக சமன்செய்து கொண்டேன். அதன்பின் ஐந்து கலப்பையிலும், 10 நாட்கள் இடைவெளி விட்டு ஒன்பது கலப்பையிலும் என இரண்டு முறை உழவு செய்தேன். பிறகு ஒரு வாரம் சென்று ரோட்டோவேட்டர் மூலம் நிலத்தை சமன்படுத்தி வாழைக்கன்றுகளை நடத் தொடங்கினேன். வாழையைப் பொருத்தவரை ஒரு வாழைக்கும் அடுத்த வாழைக்கும் இடையில் 5 1/2 அடி இடைவெளி இருக்கும்படி நட வேண்டும். அதேயளவுதான் ஒரு வரிசைக்கும், அடுத்த வரிசைக்கும் இருக்க வேண்டும். அதாவது, ஒரு வாழைக்கன்றின் நான்கு பக்கமும் ஒரே அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீரும் உரமும் சரியான முறையில் வேருக்குச் செல்லும். இந்த அளவில் நட்டுவந்தால் ஒரு ஏக்கருக்கு சரியாக 1000 வாழைக்கன்றுகள் வரை தேவைப்படும்.

நான் ஒரு வாழைக்கன்றை ரூ.6 என வாங்கினேன். வாழைகள் நட்ட பிறகு நன்றாக தண்ணீர் விட்டுவிட்டு வாழைக்கன்றின் தூர்ப்பகுதி மண்ணை நன்றாக வாழையோடு சேர்த்து மிதித்துவிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் மண் இறுகி கன்றுகள் சரியாக வளரும். பிறகு 4 நாள் இடைவெளியில் ஒரு தண்ணீரும், ஒரு வார இடைவெளியில் மறு தண்ணீரும் என கன்று நட்ட 20 நாட்களில் 4 முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன்பின் களை எடுக்க வேண்டும். களை எடுத்த பிறகு டிஏபி உரம் மிகக் குறைவாக போட வேண்டும். வேருக்கு அடியில் உரத்தைப் போட்டால் வேர் அழுகி விடும் என்பதால் வாழையின் தூரில் இருந்து அரை அடி தூரத்தில் மரத்தைச் சுற்றி உரத்தை தூவ வேண்டும். பிறகு மூன்று மாதத்தில் ஐந்து அடி வரை மரம் வளர்ந்துவிடும். அதன்பின் மரத்திற்கு தேவையான நேரத்தில் உரமும் தண்ணீரும் கொடுக்க வேண்டும். சரியாக எட்டாவது மாதத்தில் வாழையில் இருந்து குலை தள்ள ஆரம்பிக்கும். அந்த சமயம் மரத்திற்கு அதிகப்படியான உரங்கள் போடக்கூடாது. ஒன்பதாவது மாதத்தில் குலை முழுவதுமாக வெளிவந்து காய்கள் பெருக்கத் தொடங்கிவிடும்.

அதன்பிறகு மரத்தில் ஏதாவது பூச்சி மற்றும் நோய்கள் இருப்பது தெரியவந்தால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். எனது தோட்டத்தில் ஒவ்வொரு வாழையிலுமே சராசரியாக 14 சீப்புகள் இருக்கும் வகையில் நன்றாக காய்த்திருந்தது. ஒரு சீப்பில் அதிகபட்சமாக 18 காய்கள் வரை இருந்தது. கடந்த வருடம் வாழைக்கு நல்ல விலை இருந்தது. ஒரு கிலோ வாழை ரூ50க்கும் மேல் விற்பனை ஆனது. ஆனால், இந்த வருடம் விலை மலிவாக இருக்கிறது. அதனால் நல்ல விலைக்காக காத்திருக்கிறேன். ஆனால், கரும்பு அப்படி அல்ல. விலை குறைவாக இருந்தாலும் கூட கரும்பில் நல்ல லாபம் எடுத்துவிடலாம். ஏனெனில் சீனி, நாட்டுச்சர்க்கரை தயாரிக்க என எப்போதும் கரும்புக்கு டிமாண்ட் இருந்துகொண்டே இருக்கிறது. கரும்பு விதைப்பதற்கும் நிலத்தை நன்றாக 3 முறை உழுது சமன்செய்து விதைக்கரணையை மண்ணிற்கு மேலாக வைத்து, அதன்மேல் கொஞ்சமாக மண் கொண்டு மூடிவிடுவோம். கரும்பைப் பொருத்தவரை இடைவெளிகள் பெரிதாக தேவை இருக்காது. பொதுவாக ஒரு கரணையில் அடுத்தடுத்து கரும்புகள் வளரும்போது அதற்கு தேவையான இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியே போதுமானது. அதனால், கூடுதலாக இடைவெளி விடுவது கிடையாது. அப்படி நட்டுவந்தால் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் விதைக்கரணைகள் வரை தேவைப்படும்.

நடும்போதே இரண்டு விதைக் கரணைகளை ஒன்றாக நட்டுவிட்டேன். கரும்பு ஒரு 10 மாதப் பயிர். முதல் இரண்டு மாதம் நன்றாக நீர் கொடுத்து களை எடுக்க வேண்டும். நடவு செய்து ஒரு மாதத்தில் கரும்பின் ஒரு கரணையில் இருந்தே நான்கு அல்லது ஐந்து கரும்புகள் பக்கவெடிப்பாக வளர்ந்துவரும். இதனால் கரும்பில் இருந்து நல்ல விளைச்சல் எடுக்கலாம். முதல் மூன்று மாதத்தில் கரும்பு 5 அடி உயரத்திற்கு வளர்ந்துவிடும். 5வது மாதத்தில் கரும்பின் வெளித் தோகைகளை வெட்டி எடுத்து அதனை வாய்க்கால் அருகில் போட்டுவிடுவோம். அதன்பின், அந்தத் தோகை களில் யூரியா போட்டால் சிறிது நாட்களில் அது உரமாக மாறி கரும்புக்கு நல்ல அடி உரமாக மாறிவிடும். அதற்குப்பிறகு டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்களையும் கொடுத்து நன்றாக தண்ணீர் விட வேண்டும். கரும்பைப் பொருத்தவரை குருத்துக்கட்டை என்ற நோய் எப்போது வேண்டுமானாலும் வரும். அந்த நோய் வந்தால் குருத்து அழுகிவிடும். அதற்கு இந்த மாதிரி உரங்கள் கொடுத்து வந்தால் நோயில் இருந்து முன்கூட்டியே காப்பாற்றலாம்.

நடவு செய்ததில் இருந்து 10 மாதங் களில் கரும்பு 12ல் இருந்து 14 அடி வரை வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும். அறுவடைக்குத் தயாரான கரும்பை சர்க்கரை தயாரிப்பதற்காக ஆலைக்கு கொடுப்பது உண்டு. அல்லது நாட்டுச்சர்க்கரை தயாரிப்பதற்காகவும் கொடுப்பது உண்டு. நான் சொன்ன முறையில் பராமரித்து வந்தால் ஒரு ஏக்கருக்கு 55 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு டன் கரும்பு, சர்க்கரை ஆலைக்கு ரூ.2200க்கும், நாட்டுச்சர்க்கரை தயாரிப்புக்கு ரூ.2700க்கும் வாங்குகிறார்கள். நாட்டுச்சர்க்கரைக்காக கொடுக்கும்போது நல்ல பருமனனான கரும்புகளை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். சிலவற்றை கழித்துவிடுவார்கள். சர்க்கரை ஆலைக்குச் செல்லும்போது மொத்தமாக எடுத்துக் கொள்வார்கள். எப்படிப் பார்த்தாலும் கரும்பில் நல்ல வருமானம்தான். ஒரு ஏக்கர் கரும்புச் சாகுபடியில் இருந்து உறுதியாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். அதில் உழவு, உரம், தொழிலாளர் சம்பளம் என பாதிக்குப் பாதி செலவானாலும், ஏக்கருக்கு ரூ. 75 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விலை தட்டுப்பாடு, மகசூல் குறைவு என எப்படி இருந்தாலுமே குறைந்தபட்சமாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்தை லாபமாக பார்த்துவிடலாம்.முதல்முறை கரும்பு நடவு செய்யும்போதுதான் அதிக செலவுகள் இருக்கும். ஏனெனில், விதைக்கரணைகளை வெளியில் இருந்து பணம் கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். ஒருமுறை நடவு செய்து அறுவடை செய்தபிறகு, அதே நிலத்தில் பழைய கரணையில் இருந்து மீண்டும் கரும்புகள் வளரும் என்பதால் அடுத்தடுத்த செலவுகள் குறைவு. எனவே கரும்பு பயிரிட்டால் நிச்சயம் இனிப்பான லாபத்தைப் பார்க்கலாம்’’ என மகிழ்வோடு பேசி முடித்தார் வீராசாமி.
தொடர்புக்கு:
வீராசாமி: 86757 07094

செவ்வழுகல் நோய்

செவ்வழுகல் நோய் வந்தால் கரும்பின் 3 அல்லது 4வது இலைகள் முதலில் ஆரஞ்சு நிறம் கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும். பின் தோகைகள் கீழிருந்து மேலாகக் காய ஆரம்பிக்கும். பூஞ்சைகள் இலை வழியே நடுக் கரும்பிற்கு சென்று கரும்பின் உள்ளே சிவப்பு நிறமாக மாறிவிடும். அதாவது, கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதியில் சிவப்புநிறக் கோடுகள் இருக்கும். இதுவே, செவ்வழுகல் நோய்க்கான அறிகுறி ஆகும். இந்த நோயைத் தடுப்பதற்கு முதலில் ஆரோக்கியமான விதைக் கரணைகளைத் தேர்ந்தெடுத்து நடவேண்டும். செவ்வழுகல் நோய் வந்த வயல் வழியாக நீர் பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும். செவ்வழுகல் நோய் தோன்றிய அதே நிலத்தில் கரும்பை மீண்டும்
பயிரிடாமல் நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும்.

Related posts

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது..!!

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது: புதிய கேமராக்கள் பொருத்தம்

நெல்லையில் ஆட்டோ கவிழ்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியரான சிறுவன் பலி..!!