மாஜி அமைச்சரால் சொத்து பத்திரம் இழந்து தவிக்கும் இலை கட்சி வேட்பாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சொந்த கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்த தாமரை கட்சியின் நிர்வாகி பற்றி தான் பரபரப்பு பேச்சாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் தாமரை கட்சியின் சார்பில் போட்டியிட மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் தலைமையிடம் தெரிவித்தாராம்.. தனக்கு சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், அந்த முக்கிய நிர்வாகி இருந்து வந்தாராம்.. ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லையாம்.. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர், நான் யார் என்பதை தலைமைக்கு ‘காட்ட வேண்டும்’ என்பதில் குறிக்கோளாக இருந்தாராம்.. நடந்து முடிந்த தேர்தலில், சொந்த கட்சிக்கு எதிராகவே அந்த நபர் உள்ளடி வேலை பார்த்தாராம்.. தற்போதுதான் இந்த தகவல் தலைமைக்கு சென்றுள்ளதாம்.. டெல்டா முழுக்க இந்த டாப்பிக் தான் தாமரை கட்சி நிர்வாகிகளிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஸ்வீட் பாக்ஸ் ஆசை காட்டிய மாஜி அமைச்சரால சொத்து பத்திரத்தை இழந்து தவிக்கும் இலைக்கட்சி வேட்பாளரின் பரிதாபம் தெரியுமா.. என்றார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தலில் வெயில் தொகுதியில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட சீனியர்கள் யாரும் முன்வராத நிலையில் மாஜி வீரமானவர் அரசு டாக்டர் ஒருவரை இழுத்து வந்து களத்தில் நிறுத்தினாரு. மேலிடத்தில் இருந்து ஸ்வீட் பாக்ஸ்கள் வரும் வரை தேர்தல் செலவுக்கு அவரையே பார்த்துக்கொள்ள வீரமானவர் சொல்லிட்டாராம்.. இதனால அவர், மேலிட ஸ்வீட் பாக்ஸ் வந்ததும் பயன்படுத்திக்கொள்ளலாம்னு தன்னிடமிருந்த பல கோடி அசையா சொத்துகளின் பத்திரங்கள் மூலம் செலவு செய்தாராம்..அதற்கேற்ப தலைமையிடம் இருந்து மிக தாமதமாக வந்த ஸ்வீட் பாக்ஸ்களை இறக்குவதற்குள் அதே தலைமை திடீர்னு இப்போது எதுவும் செலவிட வேண்டாம்ன்னு முற்றுப்புள்ளி வைத்து ஸ்வீட் பாக்ஸ்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக மாஜியிடம் கூறிவிட்டதாம்.. இதனால தேர்தலில் வெற்றி கிடைக்குமோ இல்லையோ என்ற சந்தேகத்தில், இருந்த சொத்துகளின் பத்திரங்களையும் மாஜியிடம் கொடுத்துவிட்டு இப்போது திருதிருவென விழிக்கிறாராம் அந்த மாஜி அரசு மருத்துவரான வேட்பாளர்..

பத்திரங்களை மீட்க ஸ்வீட் பாக்ஸ் குறித்து மாஜி வீரமானவரிடம் வேட்பாளர் கேட்க, அதற்கு நான் என்ன செய்ய முடியும். அதன் மீது பெற்ற பணமெல்லாம் செலவாகிவிட்டதுன்னு கையை விரித்து விட்டாராம்.. இந்த தேர்தல் விளையாட்டில் சேர்ந்து சொத்துகளும் போய், அரசு வேலையும் போயிடுச்சேன்னு தலை மீது கை வைத்து உட்கார்ந்து விட்டாராம் அந்த மாஜி அரசு டாக்டர். தனது இந்த விளையாட்டை வெயிலூர் தொகுதி மட்டுமின்றி, கோணமான தொகுதி வேட்பாளர் விஷயத்திலும் காட்டிவிட்டாராம் மாஜி வீரமானவர்.. இப்போது இந்த இரண்டு தொகுதிகளிலும் மாஜி வீரமானவரின் புதுடெக்னிக் விளையாட்டு தான் ரத்தங்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘இடைத்தேர்தல் ஜுரத்தில் கட்சி தலைமையை பாஜ நிர்வாகி ஒருத்தர் விளாசி தள்ளிட்டாராமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் மாவட்டத்தில் தாமரை கட்சியில் உள்ள 2 மாஜி எம்எல்ஏக்களுக்குள் கோஷ்டி பூசல் ஓய்ந்தபாடில்லையாம்.. கலியமான வரதர் மாவட்ட தலைவராகவும், நான்கெழுத்து பெயரை கொண்டவர் மாநில துணை தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவரை புறக்கணித்துவிட்டு மாநில துணை தலைவர் தனியாக பிரஸ்மீட் வைத்தாராம்.. பக்கத்து மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை அழைத்து தன் வெயிட்டை காண்பித்தாராம்.. பிரஸ் மீட்டில் நாட்டில் காலாவதியான டோல்கேட் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது, மக்களிடையே கட்சிக்கு கெட்ட பெயர்தான் ஏற்படுகிறதுனு கட்சி தலைமையையும் மாநில துணை தலைவர் விளாசி தள்ளினாராம்.. அதோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் ஜுரம் அரசியல் கட்சியினரை தாக்கியுள்ள நிலையில், நான்தான் வேட்பாளர் என்ற சிக்னலையும் இந்த பிரஸ்மீட்டில் கொடுத்திருக்கிறாராம் மாஜி எம்எல்ஏ.. மாவட்ட தலைவரை பற்றி கேட்டபோது அவர் வெளியூருக்கு சென்றிருக்கிறார் எனக்கூறி பிரஸ் மீட்டை முடித்தாராம்.. ஆக, புரம் மாவட்டத்தில் மாவட்ட தலைவரை புறக்கணித்து மாநில துணை தலைவர் தலைமையில் ஒரு குரூப் தலைதூக்கியிருப்பதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அனல் பறக்கும் வெயிலை மிஞ்சிடும் வகையில் சமூகவலைதளங்கள் மூலமா மோதிக்கொள்கிறாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மழை விட்டாலும் தூறல் விடவில்லை என்பது போல, தேர்தல் முடிந்தாலும் கடலோர அந்த மாவட்டத்தில் இலைக்கட்சியில் முட்டல், மோதல் முடிய வில்லையாம்.. பிரபல வில்லன் நடிகரின் பெயரை கொண்ட இந்த மாவட்ட இலைக்கட்சி முன்னாள் நிர்வாகி ஒருவர், சமூக வலைதளங்களில் போடும் பதிவுகள்தான் தற்போது பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை கடுப்பாக்கி இருக்கிறதாம்.. கட்சியை அழிக்கிறாங்க. வேணும் என்றே நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை தோற்கடிக்கும் வகையில் சதி வேலை செய்தாங்க என்றெல்லாம் தாறுமாறாக முகநூல் பக்கத்தில் பதிவுகள் போட்டு வருகிறாராம்.. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த இலைக்கட்சிக்காரர் மாவட்ட பொறுப்பில் இருக்கும்போது என்னென்ன செய்தாரு, எங்கெங்கு சொத்து வாங்கினாரு என்கிற பட்டியலை போட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைப்போம் என்று பதிலடி பதிவுகளை எதிர்தரப்பு வெளியிட்டு வருகிறதாம்..

அதுமட்டுமில்லாமல், இப்போது விமர்சிக்கும் இந்த இலைக்கட்சி முன்னாள் நிர்வாகி கட்சியில் தன் பதவியை காப்பாற்ற யார், யார் காலில் விழுந்தாரு என்ற போட்டோவையும் சேர்த்து வெளியிட்டு, தேனிக்காரர் அணியில் இருந்து கட்சிக்கு வந்த உங்களுக்கு இன்னும் உறுப்பினர் கார்டே வர வில்லை. நீங்க இன்னும் இலைக்கட்சியில் இணைந்ததற்கான சான்றே இல்லை. இப்படியே பதிவு போட்டா உறுப்பினர் கார்டே வராது என்றும் பதிவு செய்து வருகிறார்களாம்..  இலைக்கட்சிக்காரங்க சமூக வலைதள கணக்கிற்கு போய் பார்த்தா, வெயிலை மிஞ்சும் வகையில் அனல் பறக்கிறதாம்.. சமூக வலைதளத்தில் சண்டை போடும் இவங்க, ஒருவருக்கொருவர் நேர்ல பார்க்கும்போது பவ்யமாகி விடுகிறார்களாம்.. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் குழம்பி போய் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்

அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்வு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு