உ.பி-யில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய போது மாணவி சுட்டுக் கொலை: திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரம்

ஜலான்: தாதா ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்தியில் உத்தரபிரதேசத்தில் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை இருவர் கும்பல் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான ஆதிக் அகமதுவும், அவரது சகோதரரும் 3 பேர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், தற்போது பெண் ஒருவரை பைக்கில் வந்த இரண்டு பேர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி இராஜ் ராஜா கூறுகையில், ‘கல்லூரித் தேர்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரோஷ்னி அஹிர்வார் (21) என்பவரை, பைக்கில் வந்த இரண்டு பேர் மடக்கினர்.

பின்னர் மாணவியின் தலையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்திலேயே மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இரண்டு பேரையும் உள்ளூர்வாசிகள் பிடிக்க முயன்றும், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ் அஹிர்வார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால், அந்த மாணவியை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். இச்சம்பவம் குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வெளியிட்ட பதிவில், ‘உத்தரபிரதேசத்தில் இருக்கும் போலி ஊடகவாதிகளும், பாஜகவும் மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதை கொண்டாடுவார்களா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளது.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்