புழல் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டு: பழுதாகும் மின் சாதனங்கள்; பொதுமக்கள் அவதி

புழல்: புழல் சுற்று வட்டார பகுதிகளில், இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை புழல் அண்ணா நினைவு நகர் கடை வீதி, புனித அந்தோணியார் நகர், லிங்கம் நகர், எம்ஜிஆர் நகர் மதுரா மேட்டுப்பாளையம் அறிஞர் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் திடீரென இரவு நேரங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால், கோடை காலத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மின் தடை ஏற்பட்டுள்ளதை தெரிவிக்க, அதற்கான தொலைபேசியில் தொடர்பு கொண்டால், சம்பந்தப்பட்டவர்கள் யாரும் போனை எடுப்பதில்லை. குறைந்த மின் அழுத்தம் உள்ளதால், மின் சாதன பொருட்கள் குறிப்பாக, ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுது அடைந்து வருகிறது. புழல் பகுதியில் பல ஆண்டுகளுக்கு போடப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்து உள்ளன. இதனால் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறது. இதை சரி செய்யுமாறு, அலுவலகத்தில் புகார் அளித்தால், போதுமான ஊழியர்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தற்போது உள்ள மின்சார தேவைக்கு ஏற்றாற்போல் புதிதாக பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்களை அமைத்து சீரான மின்சாரம் வழங்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் புழல் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என, புழல் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர்.

* நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பூந்தமல்லியை அடுத்துள்ள நசரத்பேட்டை வரதராஜபுரம் ராஜீவ் காந்தி தெருவில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மற்றும் உயரழுத்த மின்சாரம் அடிக்கடி வருகிறது. இதனால் வீட்டில் பயன்படுத்தப்படுகின்ற மின்சாதனங்கள் அடிக்கடி பழுதடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வரதராஜபுரம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் வீடுகள் அதிகமுள்ள நிலையில், மேலும் பல வீடுகள் உருவாகி வருகின்றன. அடிக்கடி இங்கு மின்வெட்டு ஏற்படுவதுடன், குறைந்த மற்றும் உயர் அழுத்த மின்சாரம் சப்ளை ஆகிறது. இதனால், மிக்ஸி, கிரைன்டர், பிரிட்ஜ், வாஷிங் மிசின், டி.வி., கம்யூட்டர், லேப்டாப் ஆகியவை உயரழுத்த மின்சாரம் வரும்போது பழுதடைந்து விடுகின்றன. மேலும் இரவு நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள் தூங்க இயலாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதனை சரிசெய்து கொடுக்கும்படி தலைமை மின்வாரிய அலுவலகம், நசரத்பேட்டை மின்வாரிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர், மின் வாரிய பணியாளர்கள் என பலரிடம் நேரில் சென்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலக புகார் புத்தகத்திலும் புகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் இரவு நேரங்களில் மின்விசிறி, குளிர்சாதன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே இது போன்ற சமயங்களில் உடனடியாக குறைந்த மற்றும் உயர் மின் அழுத்தத்தை சரி செய்து சீரான மின் விநியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்