எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணி: விஷசாராய மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்று விஷ சாராய மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷ சாரயம் குடித்த 22 பேர் அடுத்தடுத்து பலியான நிலையில், 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்பி உள்பட பலர் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், விஷ சாராய மரணத்துக்கு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்க நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டனர். இந்த பேரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் தமிழ்மகன் உசேன், பாலகங்கா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை அருகிலேயே அதிமுகவினர் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் 9 பேர் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, புகார் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். மனுவை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். விஷ சாராய மரணம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை. அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை. உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மே 15ம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!

மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!