ஸ்ரீநகர் பனிப்பொழிவு, நிலச்சரிவில் சிக்கிய 7 ஆசிரியர்கள், 74 மாணவர்கள் பத்திரமாக மீட்பு: 3 நாட்களாக தவித்த நிலையில் ராணுவம் அதிரடி

ஜம்மு: ஸ்ரீநகரில் ஏற்பட்ட பனிப்பொழிவு, நிலச்சரிவில் சிக்கிய ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 7 ஆசிரியர்கள், 74 மாணவர்களை ராணுவம் பத்திரமாக மீட்டது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்படும் மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள், 74 மாணவர்கள் கொண்ட குழுவினர், சுற்றுலா பயணமாக ஜம்மு-ஸ்ரீநகர் சென்றனர். அவர்கள் என்ஹெச் 44 நெடுஞ்சாலையின் வழியாக சென்ற போது கடுமையான பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டனர். கடுமையான பனிப்பொழிவால் சாலையில் தடைகள் இருந்த நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்த ராணுவ வீரர்கள், பல மணி நேர போராட்டங்களுக்கு மத்தியில் 74 மாணவர்கள், 7 ஆசிரியர்களையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் கல்பேஷ் நிகாவத் கூறுகையில், ‘கடும் பனிப்பொழிவு இருந்ததால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதனால் நாங்கள் காசிகுண்டு என்ற இடத்தில் மூன்று நாட்களாக சிக்கித் தவித்தோம். நாங்கள் சென்ற வாகனத்திற்கு 500 மீட்டர் தூரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை பார்த்து பயந்துவிட்டோம். சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ வீரர்கள், எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து பத்திரமாக மீட்டனர்’ என்றார். அதேபோல் சிக்கிம் எல்லையில் அமைந்துள்ள இந்தியா-சீனா எல்லையின் நாதுலா என்ற இடத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்