தயிர் வியாபாரியை மிரட்டி ரூ.35 ஆயிரம் பறித்த சிறப்பு எஸ்ஐ கைது: துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு

சென்னை: சென்னை புதுப்பேட்டை சியாலி தெருவை சேர்ந்தவர் சித்திக் (50), தயிர் வியாபாரியான இவர், தினசரி வியாபாரம் முடிந்ததும், வசூலான பணத்தை ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் தனது வங்கி கணக்கில் செலுத்துவது வழக்கம். அதன்படி கடந்த 9ம் தேதி இரவு சித்திக், தயிர் வியாபாரத்தில் கிடைத்த 34,500 ரூபாயை, கீழ்ப்பாக்கம் ஈவெரா சாலையில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் மையத்தில் செலுத்த வந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து கையில் வாக்கி டாக்கிகையை வைத்து கொண்டு வந்த ஒருவர் ‘தன்னை போலீஸ் என கூறி, ஏடிஎம் மையத்தில் ஏன் இவ்வளவு நேரம் இருக்கிறாய், கையில் இவ்வளவு பணம் ஏது, இது ஹவாலா பணமாக என மிரட்டி 34,500 ரூபாயை பறித்துக் கொண்டு, காவல் நிலையம் வந்து, உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள், என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்திக், உடனே கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இதுபற்றி விசாரித்தார்.

அப்போது, போலீசார் யாரும் இதுபோல், பணத்தை பறிமுதல் செய்யவில்லை, என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், ஏடிஎம் மையம் மற்றும் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு லோட்டஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (55) என்பவர், தயிர் வியாபாரி சித்திக்கை மிரட்டி பணம் பறித்து சென்றது தெரிந்தது.

இவர், தற்போது ஐசிஎப் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உத்தரவுப்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது