தெற்கு ரயில்வேக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தெற்கு ரயில்வேக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன. அயோத்தியில் மேம்படுத்தப்பட்ட அயோத்யா ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தியா வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 6 வந்தே பாரத் ரயில்களையும், 2 அம்ரித் பாரத் ரயில்களையும் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் தொடங்கி வைக்கவுள்ள 6 வந்தே பாரத் ரயில்களில் கோயம்புத்தூர் பெங்களூரு கண்டோன்மென்ட் என்ற கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில், மங்களுரு சென்டரல் என்ற மங்களூரு சென்ட்ரல் வந்தே பாரத் ரயில்களும் அடங்கும். இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன. கோயம்புத்தூரையும் பெங்களூருவையும் இணைக்கும் இந்த புதிய வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் இணைக்கும் 2வது வந்தே பாரத் ரயிலாகும். ஏற்கனவே, சென்னை- மைசூரு வந்தே பாரத் ரயில் 2022 நவம்பர் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது தொடங்கப்படவுள்ள புதிய வந்தே பாரத் ரயில் கோயமுத்தூரிலிருந்து பெங்களூரு கண்டோன்மெண்டுக்கு இடையான 380 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 20 நிமிடங்களில் சென்றடையும். மறு மார்க்கமாக பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு 6 மணி 30 நிமிடங்களில் வந்தடையும். இந்த புதிய ரயில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 11 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 11.45 மணிக்கும், ஈரோடுக்கு 12.32 மணிக்கும், சேலத்திற்கு 1.29 மணிக்கும் தர்மபுரிக்கு 2.51 மணிக்கும், ஓசூருக்கு 4.25 மணிக்கும் வந்தடையும். பெங்களூரு கண்டோன்மெண்டுக்கு 6.30 மணிக்கு சென்றடையும். இதேபோல் மங்களூரு சென்ட்ரலுக்கும் மட்காவுக்கும் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு உடுப்பி, கர்வார் வழியாக மாலை 4.40 மணிக்கு மட்காவ் சென்றடையும்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்