சிங்கப்பூருக்கு கப்பல் விடுவேன் என வாக்குறுதி கொடுத்து அதிரவைத்த இலை வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

“சிறையில செல்போன் சிக்குது, ஆனா, யார் தான் கொண்டு வர்றாங்கன்னு தெரியாம இருக்குதாமே?” என்று கேட்டார் பீட்டர் மாமா.
“வெயிலூர்ல இருக்குற சென்ட்ரல் ெஜயில்ல விசாரணை, தண்டனை கைதிகள்னு 500 பேருக்கும் மேல அடைத்து வைக்கப்பட்டிருக்குறாங்க. சிறையில இருக்குற கைதிங்க, செல்போன் பயன்படுத்துறதாக கம்ப்ளைண்ட் வருது. இதனால ஜெயிலுக்குள்ள செக் பண்ணியிருக்காங்க. அப்போது, கழிவறை பகுதிகள்ல செக்கிங் செய்தபோது, ஒரு கவர் இருந்திருக்குது. அதுல ஒரு செல்போன், பேட்டரி சிக்கியிருக்குது. அதேபோல, இன்னொரு பிளாக்ல செக் பண்ணபோது, ஒரு கைதியோட அறையில ஒரு செல்போன், 2 பேட்டரிகள், ஒரு சிம்கார்டு கிடைச்சிருக்குது. கொஞ்ச நாளுக்கு முன்னாடி இதேபோல கவர்ல செல்போன், பேட்டரி கிடைச்சது. இப்படி அடிக்கடி சிறைக்குள்ள செல்போன் சிக்குது. ஆனா, யார் தான் இதையெல்லாம் சிறைக்குள்ள கொண்டு போறாங்கன்னு தான் தெரியாம இருக்குது. சிறை காக்கிகள் இதை கண்டுபிடிச்சு, உள்ளே கொண்டுவர்ற கருப்பு ஆட்டை கையும் களவுமா பிடிக்கணும், அப்பத்தான் சிறையில செல்போன் பயன்பாட்டை தடுக்க முடியும்னு சிறைக்குள்ள இருந்தே கம்ப்ளைன்ட் போகுதாம்” என்றார் விக்கியானந்தா.
‘‘ரோடு ஷோவால் பூத் கமிட்டி காசுன்னு குறிப்பிட்ட அமவுண்ட் வந்து சேர்ந்திடுச்சின்னு சொல்றாங்களே?” என்று அடுத்த கேள்வியை போட்டார் பீட்டர் மாமா.
‘‘முட்டைக்கு பேமசான தொகுதியில் தாமரை சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரு போட்டி போடுறாரு. ஸ்டேட் லெவல் லீடராக இருந்த போதும் அவரது பிரசாரத்தில் மாம்பழம், சைக்கிள், குக்கர் போன்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளை இதுநாள்வரை பார்ப்பது அரிதாகவே இருந்ததாம். அவுங்க வந்தாலும், வராவிட்டாலும் எனக்குன்னு ஒரு செல்வாக்கு இருக்கு. இத்தனை பர்சென்ட் ஓட்டு இருக்கு என்று கெத்து காட்டி ஓட்டு கேட்க போய்கிட்டு இருந்தாராம் துணைத்தலைவரு. இந்த நேரத்தில் தான் முன்னாள் தேசிய தலைவரான பாதுகாப்பு மினிஸ்டரு, ரோடு ஷோ காட்ட வந்தாராம். இதனால் கூட்டணிகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் மாநில துணைத்தலைவருக்கு வந்திருச்சாம். அப்புறம் என்ன? கூட்டணி கட்சி நிர்வாகிகளின் கையில் பூத் கமிட்டி காசு என்ற பெயரில் குறிப்பிட்ட அமவுண்ட் போய் சேர்ந்ததாம். அவுங்களும் கொஞ்சம் திருப்தியோட ேராடு ேஷாவுக்கு வந்தாங்களாம். ரோடு ஷோவுக்கு ஆளுங்களை திரட்டி வரவும் தலைக்கு இரண்டு பெரிய நோட்டுகளை கொடுத்தாங்களாம். ரெண்டு மணிநேரம் வெயிலில் காத்து நின்னு ஷோவில் பங்கேற்றதுக்கு இது ரொம்ப குறைவுதான் என்றும் சலிச்சுகிட்டாங்களாம் சில கூட்டணி நிர்வாகிகள்” என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி வேட்பாளரின் வாக்குறுதிகளை தொண்டர்களே கேட்க முடியாமல் கமென்ட் அடிக்கிறாங்களாமே’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோரம் மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் மாஜி அமைச்சர் மணியானவர் ஆதரவாளரான கடைசி எழுத்தில் முடியக்கூடிய சங்கர் என்பவர் இலை கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம் வாக்குறுதிகளை அள்ளி விடுகிறாராம்… கடலோர மாவட்டத்தை தொழில் நகரமாக மாற்ற சிங்கப்பூருக்கு கப்பல் சேவை தொடங்குவேன் எனக்கூறி வாக்காளர்களை அதிர வைக்கிறாராம்… மீன்களை பதப்படுத்த நவீன வசதிகளுடன் கூடிய தொழிற்சாலை உருவாக்குவேன் என கூறினால் கூட ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால்… மீன்களை ஏற்றுமதி செய்ய விமான நிலையம் அமைப்பேன் என கூறுவது எப்படி சாத்தியமாகும். அதை விட்டு ஏதோ நானும் தேர்தல் வாக்குறுதிகளை தருகிறேன் என அள்ளி விடுகிறார். வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்களிடம் வேட்பாளர் அளிக்கும் வாக்குறுதிகளை கேட்க முடியாமல் அவருடன் கூட செல்லும் கட்சி தொண்டர்களே தங்களுக்குள் கமென்ட் அடித்து சிரிக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரபல தாதா மனைவியை தாமரை கட்சியில் சேர்த்ததால் நிர்வாகிகளுக்குள் புகைச்சலாமே தெரியுமா?..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுவை நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி என்றாலும் காங்கிரஸ், பாஜவுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறதாம்… தேர்தலில் நிற்க மாட்டேன்னு கூறி வந்த உள்துறை அமைச்சர் சிவாயமானவர், திடீர்ரென வேட்பாளரா அறிவிக்கப்பட்டார். ஆரம்பத்தில் நிதி பிரச்னையால் பாஜ மாநில தலைமைக்கும், வேட்பாளருக்கும் சிறிய பூசல் உண்டானது. உடனே பாஜ மேலிட பார்வையாளர் தலையிட்டு சரி செய்தாராம்.. தற்போது பிரபல தாதாவின் மனைவியை கட்சியில் சேர்த்தது பாஜ மாநில தலைமைக்கு பிடிக்கவில்லையாம்… தாதா மனைவியை கட்சியில் சேர்க்க நான்கு எம்எல்ஏ தலைமையில் பேரணி நடத்தியது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்திய ஏற்படுத்தியிருக்காம்.. இதற்காக கட்சியில் மூத்த நிர்வாகிகள், இந்த நேரத்தில் இதுபோன்ற நிகழ்வு கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம்.. கட்சியில் தற்போது யார் வந்து சேர்ந்தாலும் கட்சிக்கு ஓட்டு கிடைக்கும் என்பதால் சேர்த்தோம்னு சிவாயமானவர் தரப்பு கூறுகிறதாம்.. தேர்தலுக்காக தாதா மனைவியை சேர்த்ததால் ஓட்டு தான் குறையும், ஓட்டு வங்கியை அதிகரிக்க உதவாதுன்னு பாஜ மாநில தரப்பு கூறுகிறதாம்.. இதனால் கட்சியில் இரு அணியாக உடைந்து வாக்கு சேகரிக்கும் படலமும் நடந்திட்டு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘4 கோடி சிக்கியதுக்கு உள்குத்துதான் காரணம்னு அல்வா மாவட்ட வேட்பாளர் புலம்புறாராமே..’’ தெரியுமா எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா தொகுதியின் எம்எல்ஏ எப்படியோ அடித்துப் பிடித்து தேசிய கட்சியில் சீட் வாங்கி விட்டார். ஏற்கனவே அவரை தூத்துக்குடி தொகுதி என அறிவித்த தேசிய கட்சியின் தலைமை பின்னர் நெல்லை என மாற்றி அறிவிச்சது. சீட் கிடைத்த கையோடு கடலோரம் குடிகொண்டுள்ள முருகன் கோயிலுக்கு சென்று ‘சத்ரு சம்ஹார யாகமும்’ நடத்தினாரு.. அதாவது எதிரிகளை ஒழிக்க இந்த யாகம் நடத்துவதாக நம்பிக்கை. இந்த யாகம் யாருக்காக நடத்தினார். சொந்த கட்சியினருக்காகவா, எதிர்க்கட்சியினருக்காகவா என அல்வா மாவட்டத்தில் பரபரப்பான விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.. அதாவது எதிரிகளை வீழ்த்த அவர் யாகம் நடத்தினாலும், வசமாக அவரை சிக்கலில் மாட்டி விட்டனராம் உள்கட்சி எதிரிகள்.. தேர்தல் செலவுக்காக ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடி பணம் வசமாக சிக்கியது. பணம் கொண்டு சென்ற 3 பேரையும் அலேக்காக தூக்கிய ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான தமிழ்நாடு போலீசார், அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தில் உண்மையை கக்கி விட்டனராம்.. பணம் கொண்டு செல்வதை சொந்த கட்சியினரே போலீசிடம் போட்டு கொடுத்து விட்டனர். அதனால்தான் பணம் போலீசில் சிக்கி விட்டது. ஏற்கனவே தேசிய கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருக்கும் அவர் மக்களவை தேர்தலில் நிற்பதை தேசிய கட்சியினரே விரும்பவில்லையாம்.. இதனால் தான் அவரை சிக்க வைக்க இந்த உள்குத்து வேலையில் கட்சியினரே ஈடுபட்டுள்ளனர் என அல்வா ஊரின் தேசியக்கட்சி தொண்டர்கள் பரபரப்பா பேசிக்கிட்டு இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய பசுமை பூங்கா அமைக்க வேண்டும் : முதலமைச்சருக்கு அன்புமணி கடிதம்

அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

“எப்படி இருந்த நான்” இப்படி ஆயிட்டேன்..! நவீன வசதிகளுடன் புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு