நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை 9 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!

மும்பை: நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஏப்.25ம் தேதி வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதிகாலை 4:51 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி சத்தம் கேட்டு சல்மான் கான் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். நடிகர் சல்மான் கானுக்கு ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சல்மான்கான் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்று இரவு குஜராத் மாநிலத்தில் இந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

நேற்று கைது செய்யப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது குற்றவாளிகளை 14 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், 9 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் ஒரு மாதமாக தங்கியிருந்து கண்காணித்து வந்துள்ளனர்.

சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீட்டிற்கும் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர். பன்வெலில் முகம் தெரியாத நபர் மூலம் ரூ. 20,000-க்கு பழைய பைக் ஒன்றை வாங்கியுள்ளனர். 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு பைக்கில் தப்பிய இருவரும், பைக்கை ஒரு இடத்தில் போட்டு விட்டு, ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் சென்றுள்ளனர். அங்கிருந்து லோக்கல் ரயில் மூலம் சாண்டா குரூஸில் இறங்கியுள்ளனர். அங்கிருந்து விமான நிலையத்திற்கு சென்று தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Related posts

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

நெல்லை மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மூதாட்டி பலி