செங்குன்றம் அருகே தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ

புழல்: செங்குன்றம் அருகே இயங்கி வரும் ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், அலுவலகத்தில் இருந்த டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டன. இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செங்குன்றம் அருகே பாலவாயல்-சோத்துப்பாக்கம் சாலையில் ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துகள் மற்றும் கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும், அலுவலகத்துக்கு அருகே உள்ள காலி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மேலும், இந்த சொகுசு பேருந்துகளை ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நேற்றிரவு 3 சொகுசு பேருந்துகள் மற்றும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிகளவு கரும்புகை வெளியானது. சிறிது நேரத்தில் அலுவலகம் முழுவதிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால் அலுவலகத்தில் பணியில் இருந்து ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசாரும் அம்பத்தூர், செங்குன்றம், மாதவரம் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, தனியார் டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்தில் பற்றியெரிந்த தீயை அணைத்தனர். எனினும் அலுவலகத்தில் இருந்த ₹5 லட்சம் மதிப்பிலான டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர், ஏசி உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அருகே நின்றிருந்த 3 சொகுசு பேருந்துகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அவை தீ விபத்தில் சிக்கி சேதமாகாமல் தப்பியது.

இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக தெரியவந்தது. எனினும், தொழில் போட்டி காரணமாக யாரேனும் அலுவலகத்தில் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்