பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை: திண்டிவனம் காவல்நிலையத்தில் பரபரப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சகலகலாதரன் (59). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி, தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு எடுக்க சென்றபோது, தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த மாணவி, வெளியே ஓடி வந்துவிட்டார். மாணவி, யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக 10ம் வகுப்பு தேர்வு பணிக்கு சென்ற தலைமை ஆசிரியர் கடந்த 20ம் தேதி பள்ளிக்கு திரும்பினார். தலைமை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் மாணவி கூறி அழுதுள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அன்றைய தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த ரோசணை போலீசார், தலைமையாசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது, அவரை, பொதுமக்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யாமல், காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நேற்று மாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர்.
தலைமை ஆசிரியருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் 3 நாளில் கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்தனர். மேலும் துறை ரீதியான நடவடிக்கைக்கு மாவட்ட கல்வி்த்துறை அதிகாரிகளை அனுகுமாறு அறிவுறுத்தினர். இதனை ஏற்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்