நாசிக் வெங்காயம் ஆசை காட்டி யூடியூப்பில் ரூ.2.14 கோடி மோசடி: காய்கறி புரோக்கர் கைது

திண்டுக்கல்: நாசிக் வெங்காய வியாபாரம் செய்வதாக யூடியூபில் விளம்பரம் பதிவிட்டு ரூ.2.14 கோடி மோசடி செய்த காய்கறி புரோக்கரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (35). இவர் வத்தலக்குண்டுவை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி விற்கும் புரோக்கராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டில் யூடியூபில் புதியதாக கணக்கு துவங்கி, மும்பை நாசிக் பகுதியில் வெங்காயம் வாங்கி அதை நல்ல விலை வரும்போது விற்பனை செய்து வருகிறேன். இதில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களின் பணத்தை 30 சதவீதம் அதிகமாக்கி திரும்ப தருகிறேன்’ என விளம்பரம் செய்தார்.

இதை யூடியூபில் பார்த்து உண்மை என நம்பிய சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் (40), சூர்யாவை தொடர்பு கொண்டு அவர் கூறிய வங்கி கணக்கில் இரண்டு தவணையாக ரூ.14 லட்சத்தை செலுத்தினார். இவர் உட்பட திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 22 பேர் ரூ.2 கோடியே 14 லட்சத்தை லட்சத்தை சூர்யாவின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆனால் கூறியபடி பணம் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை.

பின் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனைவரும் சூர்யாவை, தொடர்பு கொள்ள முயன்றனர். அதற்குள் சுதாரித்து கொண்ட சூர்யா, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவானார். இதுகுறித்து சென்னை சந்திரசேகர், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தென்காசியில் பதுங்கி இருந்த சூர்யாவை நேற்று கைது செய்தனர். சூர்யா மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இதனால் பணமோசடி மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!

கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சேலம் ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்..!!