கொள்ளையடிக்க சென்ற இடத்தில் துரத்தியதால் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன் பலி: சைதாப்பேட்டையில் நள்ளிரவு பரபரப்பு

சென்னை: கொள்ளையடிக்க சென்ற இடத்தில் வாலிபர்கள் திருடன் என விரட்டியதால் கொள்ளையன் அவர்களிடம் இருந்து தப்பிக்க 3வது மாடியில் இருந்து குதித்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சைதாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வீட்டின் மூன்றாவது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு நண்பர்களுடன் அறையில் தூங்கி கொண்டிருந்தார். இரவு காற்றுக்காக அறையில் கதவை மோகன்ராஜ் திறந்து வைத்திருந்தார்.

இதற்கிடையே வாலிபர்கள் தங்கியுள்ள அறையில் செல்போன்கள் திருட மர்ம நபர் ஒருவர் நேற்று நள்ளிரவு அறைக்குள் புகுந்துள்ளார். அப்போது அறையில் சத்தம் கேட்டு திடீரென மோகன்ராஜ் விழித்து பார்த்த போது, அறையில் உள்ள செல்போனை வாலிபர் ஒருவர் எடுத்து கொண்டிருந்ததை பார்த்து திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்போன் திருட வந்த மர்ம நபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் மோகன்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடனை பிடிக்க முயன்றார். அப்போது மர்ம நபர் தன்னை காப்பாற்றி கொள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து ஜன்னல் சிலாப்பில் குதித்து தப்பிவிடலாம் என்று குதித்துள்ளார்.

இதில் தவறி 3வது மாடியில் இருந்து சிலாப்பில் அடிப்பட்டு பிறகு, மரக்கிளை மீது விழுந்து கீழே விழுந்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சைதாப்பேட்டை கோதாமேட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(31) என்றும், இவர் முதல் முறையாக திருட முயற்சி செய்து அதன்படி செல்போன்கள் திருட வந்த இடத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இருந்தாலும் போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை

வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்