நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது

அம்பத்தூர்: நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பணம், செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(39). இவர் அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், முத்துமாரியம்மன் கோயிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.25,000 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, திருடு போன பணத்தை மீட்டுத் தரும்படி கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு உதவி ஆணையர் அருண் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருவர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் புகுந்து உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் செல்லும் காட்சி தெரியவந்தது.

அந்த காட்சியில் பிரபல வழிப்பறி கொள்ளையனான பழைய குற்றவாளியின் முகம் தெரிந்தது. இதனையடுத்து நேற்று அந்த குற்றவாளியின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது போலீசாரைப் பார்த்தும் அவர் தப்ப முயன்றார். போலீசார் அவரை விரட்டிச் சென்று சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் சென்னை நெற்குன்றம் மேட்டுகுப்பம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற திருட்டு விக்கி(22) என்பதும், இவர் மீது பல காவல் நிலையங்களில் கஞ்சா, செல்போன் மற்றும் செயின் பறிப்பு, வழிப்பறி உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவரது கூட்டாளியான 17 வயது சிறுவனும் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் திருட்டு விக்கி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.21,000 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதில் அவரது கூட்டாளியான 17 வயது சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Related posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம்

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி