உடல் நலம் குன்றியதால் மன அழுத்தம்; ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உத்தரபிரதேச காவல்துறை அதிர்ச்சி

லக்னோ: உத்தர பிரதேச காவல் துறையின் ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி, உடல் நலம் குன்றியிருந்த நிலையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கோமதி நகர் பகுதியில் அம்மாநில காவல் துறையின் ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி தினேஷ் குமார் சர்மா (73), அவரது மனைவியான ஓய்வுபெற்ற தாவரவியல் துறை பேராசிரியை நீதா சர்மா தம்பதி வசித்து வருகின்றனர். அவரது மகனான இன்ஜினியர் ஆரேஞ்சய் தனது மனைவியுடன் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். டிஜிபியின் மகள் அவந்த்னா, நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தினேஷ் குமார் சர்மா, தனது அறையில் தனியாக இருக்கும் போது, தனது உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு, அவரது மகன் மேல்மாடிக்கு சென்று பார்த்த போது, தனது தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முன்னாள் டிஜிபி தினேஷ் குமார் ஷர்மாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது வீட்டில் கிடைத்த தற்கொலைக் குறிப்பு கடிதத்தில், ‘எனது தற்கொலை முடிவு அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கலாம். உடல்நலம் பாதிக்கப்பட்ட நான், தொடர்ந்து மன அழுத்தத்துடன் வாழ முடியாது என்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது தற்கொலை முடிவுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல’ என்று எழுதியுள்ளார். அதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கூடுதல் டிஜிபி பினோத் சிங் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொண்ட தினேஷ் குமார் சர்மா, மெயின்புரியில் எஸ்பியாகவும், கோரக்பூரில் ஐஜியாகவும், பாதுகாப்பு அமைப்பில் ஏடிஜிபியாகவும், பின்னர் டிஜிபியாகவும் உத்தரபிரதேச காவல் துறையில் பணியாற்றினார். ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அவரது மறைவு உத்தர பிரதேச காவல்துறைக்கு பெரும் இழப்பு’ என்றார்.

Related posts

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்

புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை