இலங்கை தமிழர்களின் மரியாதை, கவுரவத்தை உறுதி செய்ய வேண்டும்: ரணில் விக்கிரமசிங்கேயிடம் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இலங்கை தமிழர்களின் வாழ்வுக்கான மரியாதை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இரண்டு நாள் அரசு முறை பயணம் வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று முன்தினம் டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் மோடியை நேற்று அவர் சந்தித்து பேசினார். இதில், இலங்கை தமிழர் நலன், இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் இருநாடுகளுக்கும் இடையே, மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, நாகை இலங்கை இடையே கப்பல் சேவை, யுபிஐ பண பரிவர்த்தனை போன்ற ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி, ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் கையெழுத்தானது. இரு தலைவர்களின் சந்திப்புக்கு முன்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அதிபர் விக்கிரமசிங்கேயை சந்தித்து இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பின் மோடி கூறுகையில்,‘‘ நாங்கள் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். ஆனால் நெருங்கிய நண்பரைப் போன்று நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் கொடுத்தோம். இலங்கை தமிழர்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் விதத்தில் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 13வது சட்டதிருத்தத்தை அமல்படுத்தி, மாகாண கவுன்சில் தேர்தல்கள் நடத்தப்படும் என நம்புகிறேன். அங்கு வாழும் தமிழர்களுக்கு ரூ.75 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீனவர் பிரச்னையை மனிதாபிமான முறையில் இலங்கை அணுக வேண்டும் ’’ என்றார். அதன் பேசிய ரணில் விக்கிரமசிங்கே,‘‘ மறுசீரமைப்பு, அதிகார பகிர்வு மற்றும் வடக்கு பிராந்திய மேம்பாடு குறித்து மோடியுடன் பேசினேன். பொருளாதார நெருக்கடியின் போது ஆதரவாக நின்ற இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி’’ என்றார்.

Related posts

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்!

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 23,440.85 என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா