செங்கல்பட்டு அருகே கோயிலில் மீண்டும் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, கோயிலில் மீண்டும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அருகே, புலிப்பாக்கம் பகுதியில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மிகப் பழமையான பிடாரி ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன், கோயிலின் சுவரை துளையிட்டு, நுழைந்த மர்ம நபர்கள் அம்மனின் தங்க நகைகள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இப்புகாரின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம், மர்ம நபர்களை தேடுகின்றனர். இந்நிலையில், மீண்டும் இக்கோயிலில் நேற்று அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், இம்முறை அவர்களுக்கு நகை, பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அதன் கட்டுப்பாட்டு கருவிகளை உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு பதிவான மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளையே இன்னும் போலீசார் பிடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!

உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை