தேர்தலின்போது 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு தடை கேட்ட கேசவ விநாயகம் கோரிக்கை நிராகரிப்பு: இடைக்கால நிவாரணம் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக பா.ஜ அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பா.ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதை எதிர்த்து, கேசவ விநாயகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது, அவர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கேசவ விநயாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்று வாதிட்டார். அதற்கு, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால நிவாரணமாக இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்று உத்தரவிடுமாறு கோரினார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜுன் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்