அடுத்தகட்ட முயற்சி

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வரும் 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த இலக்கை எட்டும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபுநாடுகள், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளிலும், முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி, அவற்றின் மூலம் ரூ.9.61 லட்சம் கோடிக்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

இதன் பலனாக 30 லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில், முதல்வரின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்று, உலகப்புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து விவாதித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளனர். சென்னை அருகே, கூகுள் பிக்சல் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன்மூலம், தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நிறுவனங்கள் ரூ.3,440 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தன. கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் டாடா பவர் ரூ.70,000 கோடி, டாடா எலக்ட்ரானிக்ஸ் ரூ.7,000 கோடி, அதானி குழுமம் ரூ.42,700 கோடி, சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.31,000 கோடி, ஹூண்டாய் நிறுவனம் ரூ.26,000 கோடி, ஜெஎஸ்டபிள்யூ எனர்ஜி ரூ.10,000 கோடி,

கார்னிங் கிளாஸ் ரூ.1,003 கோடி, மகிந்திரா ஹாலிடேஸ் ரூ.800 கோடி, வின்பாஸ்ட் பேட்டரி ஆலை ரூ.16,000 கோடி, கிராக்ஸ் ரூ.2,440 கோடி, குவால்காம் ரூ.177 கோடி, டைட்டன் இன்ஜினியரிங் ரூ.430 கோடி, போயிங் ரூ.300 கோடி, கெம்ப்ளாஸ்ட் சன்மார் ரூ.1,007 கோடி, ரூ.500 கோடியில் திரைப்பட நகரம், ரூ.500 கோடியில் பேட்டரி மறுசுழற்சி ஆலை என பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன.

தமிழ்நாட்டை மென்பொருள் நிறுவனங்களின் ‘ஐடி ஹப்’ ஆக மாற்றும் வகையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரையில் மிகப்பெரிய ஐடி பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சி, தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சென்னைக்கு வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதாரம் மேம்படும். இவற்றுக்கெல்லாம் அன்றே விதை போட்டவர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

தமிழ்நாட்டில் மென்பொருள் துறையில் தேர்ச்சிபெற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கடந்த 2000ம் ஆண்டு சென்னை தரமணியில் டைடல் பார்க் உருவாக்கினார். இது, ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. இந்த டைடல் பார்க், தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் பெரும் விருட்சமாக பரவியுள்ளது. கலைஞர் போன்று, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் முதல்வரின் இந்த அடுத்தகட்ட முயற்சி பாராட்டுக்குரியது.

Related posts

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை