பின்பக்க கண்ணாடியை பார்த்து பிரதமர் கார் இயக்குகிறார்: அமெரிக்காவில் ராகுல்காந்தி விமர்சனம்

நியூயார்க்: பிரதமர் மோடி பின்பக்க கண்ணாடியை பார்த்துக்கொண்டே காரை ஓட்டுவது போல நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே நேற்று முன்தினம் உரையாற்றினார்.

அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:
இந்தியாவில் நமக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. நான் அந்த பிரச்னையை உங்களுக்கு கூறுகிறேன். பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் திறமையற்றவர்கள். நீங்கள் எதைப்பற்றி கேட்டாலும் அவர்கள் கடந்த காலத்தை பற்றியே பேசுவார்கள். பாஜவிடம் ரயில் விபத்தை பற்றி கேட்டுப்பாருங்கள், உடனடியாக அவர்கள் காங்கிரஸ் இதனை செய்யவில்லை, 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் அதை செய்யவில்லை என்று குறை கூறுவார்கள். பாடப்புத்தகத்தில் தனிம வரிசை அட்டவணையை நீக்கியது ஏன் என்று பாஜவிடம் கேட்டுப்பாருங்கள். 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று அவர்கள் குறிப்பிடுவார்கள்.

பின்னால் திரும்பி பார்ப்பது மட்டும் தான் அவர்களது உடனடி பதிலாக இருக்கும். யாராலும் பின் கண்ணாடியை பார்த்தபடி காரை ஓட்ட முடியாது. அது அடுத்தடுத்த விபத்துக்கு தான் வழிவகுக்கும். இது தான் பிரதமர் மோடியின் வியக்கத்தக்க நடவடிக்கையாகும். இவர் இந்தியா என்ற காரை ஓட்ட முயற்சிக்கிறார். ஆனால் பின்பக்க கண்ணாடியை மட்டும் பார்க்கிறார். இந்த கார் ஏன் விபத்துக்குள்ளாகிறது, ஏன் முன்னோக்கி நகரவில்லை என்பது அவருக்கு புரியவில்லை. பாஜ, ஆர்எஸ்எஸ் என அனைவரிடமும் இதே எண்ணம் தான். நீங்கள் அவர்களை கவனியுங்கள் அவர்களது அமைச்சர்களை கவனியுங்கள். பிரதமரை கவனியுங்கள். அவர்கள் எதிர்காலத்தை பற்றி பேசுவதை காண முடியாது. அவர்கள் கடந்த காலத்திற்கு யாரையாவது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

Related posts

தென்னைக்கு இடையே மா சாகுபடி!

ரொக்கம் தரும் ரோஸ் அரளி!

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்