ரொக்கம் தரும் ரோஸ் அரளி!

இன்றைய தேதியில் காய்கறி, பழங்களுக்கு இருப்பது போலவே பூக்களுக்கும் கிராக்கி கூடிவிட்டது. மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகவே பூக்கள் மாறி இருக்கிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்காரம், கோயில் அலங்காரம் என அனைத்து விசேஷத்திற்கும் பூக்கள் தேவை அதிகரித்து இருக்கிறது. இதனால் பூக்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. மாம்பழத்திற்கு பெயர் பெற்ற சேலத்தில் இன்றைக்கு பூக்களின் சாகுபடியும் அதிகரித்து இருக்கிறது. நந்தியாவட்டை, சாமந்தி, மல்லி, அரளி பல வகை மலர்கள் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக நந்தியாவட்டை, அரளி, சாமந்தி போன்ற பூச்செடிகளுக்கு அதிகம் பராமரிப்பு தேவைப்படாது என்பதால் பலர் இதனை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம், நல்லையாம் புதூரை சேர்ந்த செந்தில் என்ற விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தில் அரளியைச் சாகுபடி செய்து அசத்தலான வருமானம் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் அரளித் தோட்டத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த செந்திலைச் சந்தித்துப் பேசினோம்.

“தலைமுறை தலைமுறையா விவசாயம்தான் எங்களோட பிரதான தொழில். எங்க நிலத்துல அப்பா விவசாயம் பார்க்கும்போது அவருக்கு உதவியாக இருப்பேன். விவசாயம் குறித்த அனைத்து விசயங்களையும் அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். அப்பா காலத்தில் எங்கள் பகுதியில் நீர்வளம் நன்றாக இருந்தது. இதனால் நெல் ரகங்களை சாகுபடி செய்து அறுவடை செய்து வந்தோம். தண்ணீர் வரத்து குறையக் குறைய விவசாயத்தில் மாற்றங்களைச் செய்தோம். குறிப்பாக கிழங்கு, காய்கறி என பயிர் செய்ய ஆரம்பித்தோம். எனக்கு 17 வயது இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அதன்பின்னர் விவசாயத்தை நானே முழுமையாக பார்க்க வேண்டிய சூழல். அப்போதுதான் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் தேவை மிகுதியாக இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு மல்லிகை சாகுபடியில் இறங்கினேன். இதில் 5 வருடம் வரை மகசூல் பார்த்தேன். அதற்குப் பிறகு தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் அறிவுரையின் படி அரளிச்செடியை சாகுபடி செய்தேன்.அரளியைப் பொருத்தவரை சிவப்பு, வெள்ளை, ரோஸ் என 3 ரகம் இருக்கிறது. தற்போது எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் 1.25 ஏக்கர் நிலத்தில் ரோஸ் அரளியை சாகுபடி செய்திருக்கிறேன். மீதமுள்ள 75 சென்டில் 30 கொய்யா மரம், மாடுகளுக்கு தேவையான சோளத்தட்டை சாகுபடி செய்திருக்கிறேன். எனக்கு அரளியைச் சாகுபடி செய்ய எனக்கு 500 செடிகள் வரை தேவைப்பட்டது. நடவுக்குத் தேவையான செடிகளை அருகில் உள்ள ஜல்லூத்துப்பட்டியில் இருந்து வாங்கி வந்து நடவு செய்தேன். என்னுடைய நிலத்தில் இருக்கும் மண் களிமண் வகையைச் சேர்ந்தது. தண்ணீரை அதிகமாக தேக்கி வைக்கும் பக்குவம் கொண்டது இந்த மண். ஆனால் வெயில் காலங்களில் மண்ணில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றி மிகவும் கடினமாக மாறிவிடும். அதனால் நடவுக்காக 5 கலப்பை கொண்டு முதல் உழவு ஓட்டினேன். முதல் உழவின்போது 6 டிராக்டர் தொழுவுரம் போட்டேன். இதில் மூன்று டிராக்டர் உரம் என்னிடம் கையிருப்பில் இருந்தது. மேலும் தேவையான தொழுவுரத்தை ஒரு டிராக்டர் ரூ.2500 என்ற கணக்கில் வாங்கி உழவு ஓட்டினேன். மொத்தம் 5 உழவு ஓட்டினேன். இதில் நான்கு மற்றும் ஐந்தாவது உழவின்போது ரொட்டேவேட்டர் பயன்படுத்தினேன்.

இதன்மூலம் கெட்டியாக கல் போன்று இருந்த களிமண் பொல பொலவென்று மாறிவிட்டது. ரொட்டேவேட்டர் கொண்டு உழவு ஓட்டுவதன் மூலம் ஏற்கனவே நிலத்தில் இருக்கும் செடிகள், புற்கள் மண்ணோடு மண்ணாக கலந்து செடிக்கு உரமாக மாறிவிடும். இதன்பிறகு செடிகளை நிலத்தில் நடவு செய்தேன். ஒவ்வொரு செடியினையும் ஒரு அடி ஆழத்திற்கு குழி தோண்டி நடவு செய்தேன். இதற்கு அடியுரமாக மாட்டுச்சாணம் மட்டுமே பயன்படுத்தினேன்.

அரளிச்செடிகளை வாங்கி வரும்போதே ஒன்றரை அடி உயரம் கொண்டதாக இருந்தது. செடிகளை நடவு செய்த ஒரு வாரத்திற்கு பின்புதான் முதல் தண்ணீர் விட்டேன். அரளியைப் பொருத்தவரையில் எந்தவொரு சீதோஷ்ண நிலையிலும் வளரும் பக்குவம் கொண்டது என்பதால் நாம் பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு மாதம் கழித்து செடிகளுக்கு இடையில் வளர்ந்து இருந்த தேவையற்ற களைகளை அகற்றினோம். களை எடுத்த பின்பு ஒவ்வொரு செடிக்கும் மாட்டுச்சாணமும், 100 கிராம் டிஏபி உரமும் கொடுத்தேன். டிஏபி உரம் கொடுப்பதன் மூலம் செடிகள் நன்கு வளரும். நல்ல மகசூலும் கொடுக்கும். இரண்டு மாதம் கழித்து மீண்டும் ஒருமுறை களை எடுத்தேன். அப்போது ஒருமுறை டிஏபி மற்றும் மாட்டுச்சாணத்தை உரமாக செடிகளுக்குக் கொடுத்தேன். அரளியைப் பொருத்த வரையில் நடவு செய்த இரண்டரை மாதத்தில் பூக்கள் வரத்தொடங்கிவிடும். பூக்கள் வரும்போது செடிகளை வெள்ளைப் பூச்சிகள் அதிகம் தாக்கும். இதற்கு வேப்ப எண்ணெய் கரைசலைத் தெளிப்போம். இதில் பூச்சிகள் கட்டுப்படவில்லை என்றால் பனமரத்துப்பட்டி தோட்டக்கலைத்துறை அதிகாரி குமரவேல் வழங்கிய ஆலோசனைப்படி 10 லிட்டர் தண்ணீரோடு 50 மில்லி மோனோ மருந்தை, அஸ்பெட் பவுடருடன் சேர்த்து செடி களின் மீது ஸ்ப்ரே செய்வேன். இதன்மூலம் செடிகளில் பூச்சித் தாக்குதல் குறையும்.

செடி நடவு செய்த நான்கு மாதத்தில் எனக்கு ஒரு நாளைக்கு 25 கிலோ வரை பூக்கள் மகசூலாக கிடைத்தது. இதுவே மூன்று மாதம் கழித்து எனக்கு 12 கிலோவாக குறைந்தது. தற்போது அரளிச்செடிகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 15 கிலோ வரை பூக்கள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 30 கிலோ வரை பூக்கள் கிடைக்கிறது. அரளியைப் பொருத்தவரையில் மார்க்கெட் நிலவரத்தை சரியாக சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரளிப்பூ ரூ.300க்கும் விற்பனையாகும், ரூ.30க்கும் விற்பனையாகும். தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக எனக்கு 20 கிலோ பூக்கள் மகசூலாக கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு 600 கிலோ மகசூல் கிடைக்கிறது. அறுவடை செய்த அரளிப்பூக்களை ஒரு கிலோ கொண்ட பையாக கட்டி வைத்துவிடுவேன்.

இதனை சந்தையில் நான் நேரடியாக விற்பனை செய்யாமல் வியாபாரிகளுக்கு கொடுத்துவிடுகிறேன். தற்போது சீசன் டைம் என்பதால் ஒரு கிலோ அரளிப்பூவினை சராசரியாக ரூ.180 என வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு எனக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் வரை வருமானமாக கிடைக்கிறது. இதில் உரச்செலவு, மருந்து அடிப்பவருக்கு கூலி, அறுவடை கூலி என ரூ.25 ஆயிரம் செலவு போக ரூ.83 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் அரளிப்பூக்கள் அனைத்தும் சேலம், சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நெடுஞ்சாலைகளின் நடுவில் வைக்கப்படும் அரளிச்செடிகளில் பூக்கும் பூக்களை விட எங்கள் தோட்டத்தில் விளையும் பூக்கள் நல்ல நிறமாகவும், சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் நிறைய வியாபாரிகள் எங்கள் பூக்களை விரும்பி வாங்குகிறார்கள். கடந்த இரண்டு வருடமாக அரளி சாகுபடியில் இருக்கிறேன். இதுவரையில் எனக்கு எந்தவொரு நஷ்டமும் வந்தது கிடையாது. அரளியைப் பொருத்தவரையில் 7 வருடம் வரை மகசூல் கொடுக்கும். அதனால் 5 வருடத்திற்கு பிறகுதான் அடுத்து நிலத்தில் என்ன போடலாம் என்று யோசிப்பேன்’’ என்கிறார் செந்தில்.
தொடர்புக்கு:
செந்தில்-94880 06232.

Related posts

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்