ரேஷன் பொருள் விநியோக மோசடி வழக்கு மே.வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

கொல்கத்தா: ரேஷன் பொருள் விநியோக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்குவங்க வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக்கை 10 நாள் அமலாக்கத்துறை காவலில்விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக், முன்பு உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது குடும்ப அட்டை அரிசி விநியோகம் செய்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. மேலும் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது உணவு தானியங்கள் விநியோகத்திலும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு பிரிவின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள மாலிக்கின் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், அவரது உறவினர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகள் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சால்ட் லேக் பகுதியில் ஜோதிப்ரியா மாலிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மல்லிக் கைது செய்யப்பட்டார். நீரிழிவு உள்பட பல்வேறு நோய் பாதிப்புள்ள அவருக்கு ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 5ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

கைது திட்டமிட்ட சதி – மாலிக் குற்றச்சாட்டு: கைது பற்றி ஜோதிப்ரியா மாலிக் கூறியதாவது, “திரிணாமூல் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியால் தீட்டப்பட்ட திட்டமிட்ட சதி” என்று குற்றம்சாட்டினார்.

Related posts

ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொடுமையால் ரூர்கேலாவில் 10 பேர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு.

உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு