ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது

புழல்: ஆந்திராவிற்கு கடத்தி செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலத்துக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உஷா (40), தேவி (48), மினி லாரி ஓட்டுநர் கோட்டையா (55) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இதேபோல், மீஞ்சூர் மணலி பைபாஸ் சாலையிலும் மின்னல் வேகத்தில் வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி, 44 கிலோ துவரம் பருப்பு, 30 லிட்டர் பாமாயில் போன்றவை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதில் மீஞ்சூர் அத்திப்பட்டு பாரதியார் தெருவைச் சேர்ந்த பாலச்சந்தர் (37), வைகுண்ட ராவ் (51), அகிலேஷ் குமார் (28) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்