ராம நவமி வன்முறை சிறுபான்மையினர் பகுதியில் வேண்டுமென்றே ஊர்வலம்: பா.ஜ மீது மம்தா பாய்ச்சல்

கெஜூரி: ராம நவமி தினத்தில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் பா.ஜ அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது என்று மம்தா குற்றம் சாட்டினார். ராம நவமி தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல்களை பார்வையிட பா.ஜ மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார், பா.ஜ எம்பி ஜோதிர்மயிசிங் மகாட்டோ ஆகியோர் நேற்று சென்றனர். ஆனால் போலீசார் தடை உத்தரவை காரணம் காட்டி அவர்களை அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் ராமநவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறை குறித்து முதல்வர் மம்தா கூறியதாவது: ராம நவமி ஊர்வலங்கள் ஏன் 5 நாட்கள் நடக்கிறது? ராமநவமி கொண்டாடும் நாளில் நீங்கள் இதுபோன்ற பல பேரணிகளை நடத்தலாம். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் உங்களுடன் ஆயுதங்களை எடுத்துச் செல்ல வேண்டாம். பாஜ வேண்டுமென்றே அனுமதியின்றி இதுபோன்ற ஊர்வலங்கள் பெயரில் சிறுபான்மை பகுதிகளுக்குள் நுழைகிறார்கள். ரிஷ்ராவில் ஆயுதங்களுடன் அவர்கள் பேரணி நடத்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

  • மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்
    ஹூக்ளி தொகுதி பாஜ எம்.பி. லாகெட் சாடர்ஜி கூறியதாவது: முஸ்லிம்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கவும், முஸ்லிம்களை மகிழ்விக்கவும் மம்தா பானர்ஜி செய்த முன்கூட்டிய சதியின் விளைவு இதுவாகும். அவர் திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறார். மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அச்சுறுத்தலில் உள்ளனர். மம்தா பானர்ஜி பொய் சொல்கிறார். ஒன்றிய அரசு இந்த விஷயத்தை சரியாக கவனிக்க வேண்டும். இதுபற்றி என்ஐஏ விசாரிக்க வேண்டும். முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை: அண்ணாநகர் துணை ஆணையர் அதிரடி

பள்ளிகளில் அமலுக்கு வரவுள்ள 3 புதிய உத்தரவுகள்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

மாதவரத்தில் திமுக சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி