மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலம் பெறும் பாஜ கூட்டணி

புதுடெல்லி: நடந்து முடிந்த 56 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தலில் பாஜ 30 இடத்திலும் காங்கிரஸ் 9, சமாஜ்வாடி 2, திரிணாமுல் காங்கிரஸ் 4, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 2, ராஷ்டிரிய ஜனதா தளம் 2, பிஜூ ஜனதா தளம் 2 மற்றும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பிஆர்எஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தேர்தலின் முடிவில், மாநிலங்களவையில் பாஜவின் பலம் 94ல் இருந்து 2 இடங்கள் அதிகரித்து 96 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மை பலம் பெற 123 எம்பிக்கள் தேவை. தற்போது பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி 113 எம்பிக்களுடன் உள்ளது. 12 நியமன எம்பிக்களில் 6 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே 6 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பதவியேற்பதோடு, சில சுயேச்சைகள் ஆதரவும் கிடைத்தால், இதுவரை மாநிலங்களவையில் பெரும்பான்மை பெறாத பாஜ கூட்டணி முதல் முறையாக பெரும்பான்மையை எட்ட முடியும். இது வரும் ஏப்ரல் மாதம் சாத்தியமாக வாய்ப்புகள் உள்ளன. மாநிலங்களவையில் காங்கிரசின் பலம் 30 ஆக குறைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 100க்கும் குறைவாக சரிந்துள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் பாஜ கட்சியால் முக்கிய மசோதாக்களை சிரமமின்றி நிறைவேற்ற முடியவில்லை.

ஆனாலும், ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (இரு கட்சிகளும் தலா 9 எம்பிக்களை கொண்டுள்ளன), பிஆர்எஸ் (7 எம்பி), பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் (தலா ஒரு எம்பி) ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்பு அளித்துள்ளன. இக்கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேராதவை.

Related posts

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு