ரயில்வே, வருமான வரித்துறையில் வேலை என போலி அலுவலகத்தில் 3 பேரை பணியமர்த்தி ரூ.56 லட்சம் மோசடி: நூதன கும்பலில் ஒருவர் கைது

புதுக்கடை: ரயில்வே, வருமான வரித்துறையில் வேலை எனக்கூறி போலி அலுவலகத்தில் 3 பேரை பணியமர்த்தி ரூ.56 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாற்றின்கரையை சேர்ந்தவர் ரசல்ராஜ் (49). இவரிடம் மாராயபுரம் ஜெயன் பிரபு (39), ஒன்றிய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதால் வருமான வரி, ரயில்வே துறைகளில் உடனடி வேலை வாங்கி கொடுக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய ரசல்ராஜ், கருங்கல் பகுதியை சேர்ந்த ஸ்டெம், பாலப்பள்ளம் டெய்சி செல்லத்துரை, திக்கணங்கோடு எபிரேம், தொழிக்கோடு அருண்குமார் ஆகியோரை அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து ஜெயன் பிரபு, தனது சகோதரி ரதி மீனா (26), தாய் ரத்தினபாய் மற்றும் சென்னையை சேர்ந்த சாய் பிரசாத், இன்பா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து 5 பேரும் பலரிடம் வேலை தருவதாக கூறி ரூ.56 லட்சத்து 97 ஆயிரத்து 100 பெற்றுள்ளனர். போலியாக ஒன்றிய அரசு வேலை உத்தரவை தயார் செய்து, எபிரேமுக்கு கான்பூர் ரயில்வேயிலும், டெய்சி செல்லதுரை, அருண்குமாருக்கு ஐதராபாத் வருமான வரித்துறையிலும் வேலை கிடைத்துள்ளதாக கூறி, சம்பந்தப்பட்ட இடங்களில் போலியான அலுவலகத்தை உருவாக்கி பணியமர்த்தி உள்ளனர். அவர்கள் உண்மை என நம்புவதற்காக 2 மாதமா சம்பளமும் கொடுத்துள்ளனர். பின்னர், தவறு செய்ததாக கூறி அவர்களை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

இது பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முழுமையாக விசாரித்த போது, ஜெயன் பிரபு உள்ளிட்டோர் போலி அரசு ஆணை தயார் செய்து, போலியான அலுவலகத்தில் பணியமர்த்தி நாடகம் ஆடியது தெரியவந்தது. இதுகுறித்து எபிரேம், டெய்சி செல்லத்துரை, அருண்குமார் ஆகியோர் குமரி மாவட்ட எஸ்பி ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து புதுக்கடை போலீசார் ஜெயன் பிரபு, சாய் பிரசாத், இன்பா, ரதி மீனா, ரத்தின பாய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து, ஜெயன் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் பதிவு

எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்