ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து பாஜக கேலிச்சித்திரம்; தற்கால ராவணன், தீயவர் என விமர்சனம்…காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்..!!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ராவணனை போல சித்தரித்து பாஜக கேலி சித்திரம் வெளியிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி படத்தை ராவணனை போல சித்தரித்து கேலி சித்திரம் வெளியிட்டுள்ளது. 6 தலைகளுடன் ராகுல் காந்தி இருப்பது போல உருவாக்கப்பட்ட அந்த படத்தின் மேல் தற்கால ராவணன், தீயவர், தர்மத்திற்கு எதிரானவர், ராமனுக்கு எதிரானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது இலக்கு பாரதத்தை சிதைப்பதே என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொறுப்புள்ள ஒரு ஆளும் தேசிய கட்சியின் தரம் தாழ்ந்த விளம்பரம் கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையில் ஈடுபட பாஜகவினர் தூண்டுவிக்கிறார்கள். வன்முறையால் தந்தையையும் பாட்டியையும் இழந்த தலைவர் ராகுல். ஒரு தேசிய கட்சியில் இருந்து இதுபோன்ற விளம்பரங்கள் வெளியாவது துரதிருஷ்டவசமானது, கண்டனத்திற்குறியது. இது பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

எனவே, அவர்கள் இருவரும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும், அதன் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கும் எதிராக வன்முறையை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ராவணனாக சித்தரித்து கேலி சித்திரம் வெளியிட்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். தினமும் பொய் பேசும் பொய்யியல் நோயால் பிரதமர் மோடி பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். பாஜக வெளியிட்டுள்ள அருவருப்பான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, மிகவும் அபாயகரமானவை என்றும் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை