உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்: ஐதராபாத்தில் இருந்து அதிநவீன ஆகர் இயந்திரத்தை வரவழைக்க முடிவு: புஷ்கர் சிங் தாமி பேட்டி

உத்தரகாண்ட்: தொழிலாளர்களை மீட்க இன்று இரவுக்குள் பிளாஸ்மா கட்டிங் இயந்திரம் கொண்டுவரப்பட உள்ளது என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து 14 நாட்களாக நடந்து வருகிறது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை 6 அங்குலம் அகலமுள்ள குழாய் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபி கேமரா மூலம் அனைத்து தொழிலாளர்களும் நலமாக இருப்பது வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, 60 மீட்டர் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் கடந்த புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. அந்தக் கம்பிகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, துளையிடும் பணிகள் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கிய சில மணிநேரங்களில் துளையிடும் அமெரிக்காவின் ‘ஆகர்’ இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி; தொழிலாளர்களை மீட்க இன்று இரவுக்குள் பிளாஸ்மா கட்டிங் இயந்திரம் கொண்டுவரப்பட உள்ளது. கடினமான முறையில் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. பிளாஸ்மா கட்டிங் இயந்திரம் மூலம் உள்ளே சிக்கியுள்ள ஆகர் பிளேட் நாளை காலைக்குள் அகற்றப்படும். உள்ளே சிக்கிய இயந்திரத்தை வெளியே எடுத்த பின் மனிதர்களை கொண்டு துளையிடும் பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி நாளை காலை வரை மீண்டும் தொடங்க வாய்ப்பு இல்லை. ஆகர் இயந்திர பிளேடுகளை அகற்ற ஐதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டிங் இயந்திரம் கொண்டுவரப்படுகிறது என கூறினார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்