புல்வாமா தாக்குதலுக்கு அலட்சியம் தான் காரணம்; வாய் மூடி இருக்க சொன்னார் மோடி: காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சரமாரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே புல்வாமா தாக்குதலுக்கு காரணம். அதை கூறிய போது, பிரதமர் மோடி அமைதியாக இருக்கும்படி கூறினார், என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் ஆளுநராக இருந்த போது தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன. பின்னர் அவர் கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் `தி வயர்’ ஆங்கில செய்தியின் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பத்திரிகையாளர் கரண் தப்பாரின் கேள்விகளுக்கு சத்யபால் மாலிக் பதிலளித்து கூறியுள்ளதாவது: புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஒன்றிய அரசின் குளறுபடியே காரணம். அது போன்ற சாலைகளில் பெரிய கனரக பாதுகாப்பு வாகனம் செல்ல முடியாது என்பதால் சிஆர்பிஎப் தரப்பில் 5 விமானங்கள் கேட்டனர். ஆனால் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் அதற்கு மறுத்து விட்டார்.

புல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலியான உடன் உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் இருந்து பிரதமர் என்னை அழைத்தார். அப்போது அவரிடம் தீவிரவாத தாக்குதலுக்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என்று நடந்த விவரங்களை கூறினேன். அதனை கேட்ட, அவர் என்னை அமைதியாக இருக்கும்படி கூறினார். புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாக, 300கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து 10முதல் 15 நாட்களாக காரில் காஷ்மீர் சாலைகளில் கொண்டு வரப்பட்டதில் இருந்து உளவுத்துறை எவ்வாறு செயலாற்றியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இதெல்லாம் கூட பிரச்னையில்லை. மோடியை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் அவருடைய பெயரை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர், அதிகமாக சொத்து சேர்க்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் மோடி கண்டு கொள்வதில்லை. இவ்வாறு சத்யபால் மாலிக் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் சரமாரி கேள்வி
சத்யபால் மாலிக் பேட்டியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோடி அரசு மற்றும் பாஜ மீது சரமாரி கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.
சுப்ரியா நாடே: சிஆர்பிஎப் வீரர்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது ஏன்? அவர்கள் ஏன் விமானத்தில் அழைத்து செல்லப்படவில்லை? ஜெய்ஷ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏன் புறக்கணிக்கப்பட்டது? 2019 ஜனவரி 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை உளவுத்துறை அளித்த 11 அறிக்கைகளை புறக்கணித்தது ஏன்? தீவிரவாதிகள் எங்கிருந்து 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வாங்கினார்கள்?

மக்களவை தேர்தலுக்காக பா.ஜ பயன்படுத்தியது
சத்யபால் மாலிக் மேலும் கூறுகையில், “என்னிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இது குறித்து எதுவும் வெளியில் யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று கூறினார். அப்போது பின் தான் எனக்கு தெரிந்தது நடைபெற இருந்த 2019 மக்களவை தேர்தலில் ஒன்றிய அரசும், பாஜ.வும் பயனடைவதற்காக தாக்குதல் பழியை பாகிஸ்தான் மீது சுமத்தினார்கள்” என்றார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்