மனுதாரருக்கு முறையாக தகவல் அளிக்காத கோட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு ரூ. 10,000 அபராதம்

இளையான்குடி: முறையான தகவல் அளிக்காத சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நாட்டரசன்கோட்டை தனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர் இளையான்குடியில் நீர்நிலை ஊருணி ஆக்கிரமிப்புகள் குறித்து தகவல் கேட்டு ஓராண்டுக்கு முன்பு, நாட்டரசன்கோட்டையில் உள்ள மனை வாடகை பிரிவு வருவாய் பின் தொடர் பணி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்திருந்தார்.

அதற்கு முறையான பதில் அளிக்காத நிலையில் நில அளவைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் முறையான தகவல் அளிக்காததால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக மாநில தகவல் ஆணையம், சிவகங்கை கோட்டாட்சியர் விசாரித்து உரிய தகவல்களை அளிக்க உத்தரவிட்டது. ஆனால் அதன்பின்னரும் உரிய தகவல்களை அளிக்கவில்லை. இதையடுத்து ராதாகிருஷ்ணன் மீண்டும் தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரணை செய்த மாநில தகவல் ஆணையர் தர், முறையாக தகவல் அளிக்காத சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நாட்டரசன்கோட்டை மனை வாடகை பிரிவு வருவாய் பின்தொடர் பணி தனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் உரிய தகவல்களை அளிக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து