கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் கோடியை கொள்ளை அடித்த பாஜ: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டி.நரசிபுரா: கர்நாடக மாநிலத்தில் ரூ.1.5 லட்சம் கோடியை ஆளும் பாஜ அரசு கொள்ளை அடித்துள்ளது என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். கர்நாடக மாநிலத்தில் மே10 தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநிலத்தில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவில் பொது கூட்டத்தில் பேசுகையில், ‘கர்நாடக பாஜ ஊழலில் திளைக்கிறது. மாநிலத்தில் ரூ.1.5 லட்சம் கோடியை கொள்ளை அடித்துள்ளது. இதை வைத்து மாநிலத்தில் எவ்வளவோ வளர்ச்சி பணிகளை செய்திருக்கலாம். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மாநிலத்தை நேரான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்.

பாஜ அரசு 40 சதவீத கமிஷன் என்று மக்கள் பணத்தை கொள்ளை அடித்துள்ளது. இதற்காக அவர்கள் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. அரசு ஒப்பந்ததாரர்கள் தற்கொலை குறித்து அச்சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் பாஜவினர் என்று அறிந்த பிரதமர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜ எம்எல்ஏ மகனிடம் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதை விசாரிக்காமல் பாஜவினர் எம்எல்ஏவுக்கு ஆதரவாக அணிவகுப்பு நடத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நந்தினி பால் பிராண்ட் மற்றும் பால் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும். இதர மாநில கூட்டுறவு தயாரிப்பு பொருட்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம்’ என்றார்.

Related posts

கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53.320க்கு விற்பனை

குளித்தலை அருகே மதுபோதையில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி!!