பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் வைப்பு

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டவும், கருப்பு பலூன் பறக்க விடவும் திட்டமிட்டிருந்தனர். மேலும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரவிக்கும் வகையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.

ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் கருப்பு பலூன் பறக்க விடுவதை தடுக்கும் வகையில், சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் நேற்று முன்தினம் இரவு முதல் அவரவர் வீடுகளில் போலீசாரால் சிறை வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் தனது வீட்டில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு நிலவியது. . இதேபோன்று சென்னை முழுவதும் முக்கிய காங்கிரசார் வீடுகள் முன்பு போலீசார் நிறுத்தப்பட்டதால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, பனகல் மாளிகை முன்பு காங்கிரசார் பலர் குவியத் தொடங்கினர். அவர்களை போலீசார் அகற்ற முயன்றனர்.

இதையடுத்து ஒரு மணி நேரம் மட்டும் அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தனர். இதனால் முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, தளபதி பாஸ்கர், அருள் பெத்தையா, இல.பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர்‌. பிரதமர் மோடி திரும்பி செல்லும் வரை அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பனகல் மாளிகை நோக்கி வந்து கொண்டிருந்த காங்கிரசார் பலரை வரும் வழியிலேயே மடக்கி ஆங்காங்கே இருந்த மண்டபங்களில் அடைத்து வைத்ததால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

Related posts

தாமரைக்கு தாவி சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்த அம்மணி கேபினட் ஆசையில் மிதப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரசார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு