பரமத்திவேலூரில் போலீஸ் அதிரடி வடமாநிலங்களிலிருந்து வாங்கி போதை மாத்திரை விற்ற கும்பல்: 7 பேர் கைது

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் பகுதியில் போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதை பொருட்களை ஒழிக்க எஸ்பி ராஜேஷ்கண்ணா உத்தரவின்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் காவிரி கரையோரம் சில இளைஞர்கள், போதையில் சுற்றித்திரிவதாகவும், அவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அப்பகுதியை சேர்ந்த சிதம்பரம்(27), பசுபதி (24), கார்த்திகேயன்(21), முகமது உசேன்(24), செல்வம்(23), கோகுல்(25), நித்திஷ்(22) என்பதும், போதை மாத்திரை மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

அவற்றை பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விற்று வந்துள்ளனர். மேலும் சிதம்பரம் மற்றும் பசுபதி ஆகிய இருவரும், மருந்து கடை நடத்துவது போன்று போலியான ஆவணங்கள் தயார் செய்து, ஆன்லைன் மூலம் வட மாநிலங்களான சத்தீஸ்கர், நாக்பூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மருந்து மற்றும் போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி பரமத்திவேலூர் பகுதியில் சில்லரையில் விற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து ரூ.50,000, இரண்டு டூவீலர்கள் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் கைது செய்து பரமத்திவேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related posts

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு